அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

மதுபான அறை…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அறைகள் சொல்லும் கதைகள் – 24


வாழ்க்கையைத் தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதியின் வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் அவர் தன்னை மறந்திருப்பது மதுபான அறையில் தான். வெளி உலகத்திற்கு அவர் சிறந்த மனிதர் .அவரைப் போல் யாரும் இல்லை என்ற அடையாளத்துடன் இருந்தாலும் தன்னுடைய இயல்பை, தன்னுடைய சுயத்தைத் தன் வீட்டில் இருக்கும் மதுபான அறையில்தான் கழிப்பார். அடுக்கி வைக்கப்பட்ட உயர்தர மதுபானப் பாட்டில்கள் ஆங்காங்கே இருக்கும் அழகாகப் பராமரிக்கப்பட்ட கண்ணாடி தம்ளர்கள் பத்துப் பேர் அமர்ந்து மது அருந்துவதற்கான இருக்கைகள் என்று அந்த மதுபான அறை மங்கிய வெளிச்சத்தில் மயங்கி கிடக்கும். அந்த மதுபான அறைக்குள் நுழைந்தாலே ஒருவிதமான போதை நெடி முகாமிட்டு நம்மை மயக்கத்திற்கு கொண்டுச் செல்லும். காலையில் பூஜை அறையில் இருப்பவர் மாலையில் மதுபான அறையில் இருப்பார் .சில நேரங்களில் மதியம் பகல் என்று எந்த நேரம் வேண்டுமானாலும் அவர் மதுபான அறையில் நுழைவதை தடுப்பதில்லை. எப்போதெல்லாம் அவர் மனது சந்தோசப்படுகிறது. போதெல்லாம் அவர் மனது சஞ்சலப்படுத்துகிறது. அப்போதெல்லாம் அவர் நுழைந்து கொள்வது மதுபான அறையில் தான். தன் இயல்பு மாறாத மனிதர்களுடன் சேர்ந்து மது அருந்துவது அவருக்கு அலாதி விருப்பம்.

” நீங்க என்ன வகையான மதுபானங்களை சாப்பிடுறீங்களோ சாப்பிட்டுக்கலாம். இங்க ஒயின்ல இருந்து ஹாட் வரைக்கும் எல்லாமே இருக்கு ” என்று கை காட்டுவார் சாரதி .

யார் யாருக்கு என்ன தேவையோ அதை எடுத்து குடித்துக் கொள்ளலாம். மதுபானத்தோடு சேர்த்து சாப்பிடும் சைட் டிஷ் அங்கே வரவழைக்கப்படும். தெளிவாக நடந்து போனவர்கள் மதுபான அறையை விட்டு வரும்போது தள்ளாடிக்கொண்டே தான் வருவார்கள். அதைச் சாரதியின் மனைவி சந்திரிகா கண்டுகொள்வதில்லை. ஆனால் மதுபான அறிக்கைகுள் சாரதி சென்றால் அவளுக்கு ஒரு வருத்தம் ஏற்படும். வீட்டின் உள்ளேயே இருக்கும் மதுபான அறைக்குள் அவள் தவறியும் ஒரு நாள் கூடச் சென்றதில்லை. இத்தனைக்கும் சாரதி இல்லாத நேரங்களில் அந்த அறை தாழிடாமல் தான் இருக்கும் .அந்த விருப்பமோ வருத்தமோ அவளுக்கு எப்பவும் வந்ததில்லை. இரவு நேரங்களில் நண்பர்களுடன் அமர்ந்து விட்டு சாரதி வெளியே வரும்போது, அவரின் நடவடிக்கையைப் பார்த்து ரொம்ப துக்கம் கொள்வாள் சந்திரிகா

“ஏங்க கொஞ்சம் குறைச்சிக்கிரக் கூடாதா? இவ்வளவு குடிக்கனுமா? என்று சந்திரிகா வருத்தப்பட்டுச் சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சாரதி சிரித்துக் கொண்டே மதுபான அறைக்குள் சென்று விடுவார். கணவன், மனைவி இரண்டு பேர் படுக்கும், படுக்கை அறை என்றாலும் முழு மது போதையில் வரும் சாரதி வெட்டிய மரமாகக் கட்டிலில் விழுவார்.

இரவெல்லாம் தூங்கி,அதிகாலையில் தான் எழுவார் .சந்திரிகாவின் ஆசைகள் எல்லாம் அந்தப் போதையில் கரைந்து போய் இருப்பது அவளுக்குப் பெருத்த வருத்தத்தைத் தந்தது.

” என்ன செய்யலாம் ?அவர் சம்பாதிக்கிறார். அவர் குடிக்கிறார் அவரின் சுதந்திரத்தில் தலையிடுவது அநாகரிகமானது. நாமே அவரின் உழைப்பில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?” என்று ஒவ்வொரு நாளும் மது அருந்தக்கூடாது என்ற விஷயத்தில் உதடு வரை கொண்டு வந்த வார்த்தைகளை உள்ளத்திலேயே நிறுத்திக் கொள்வாள் சந்திரிகா . எப்போதும் போல அன்றும் மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார் சாரதி. சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்ட உயர்தர மது பாட்டில்களோடு அமர்ந்து மெல்லிய வெளிச்சத்தில் சன்னமாக ஒலிக்கும் பாடலோடு அவர் மது அருந்திக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அவர் பேசுவதெல்லாம் தன் இயலாமை. தன் . தன்னால் எதுவும் முடியாது என்ற வார்த்தைகளே அங்கு வந்து விழுந்து கொண்டிருந்தன. இது எல்லாம் கதவின் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த தீபா ரொம்ப வருத்தப்பட்டாள்.

சந்திரிகா இதுவரை அந்த மதுபானக் கூட்டத்திற்குள் நுழைந்ததே இல்லை. இன்று யாரும் இல்லை. நம் கணவர் மட்டும் தான் குடித்துக் கொண்டிருக்கிறார் நாம் உள்ளே செல்லலாம் .எதற்காக இப்படி புலம்புகிறார் ?என்று கேட்கலாம் என்று நினைத்தவர் பட்டெனக் கதவைத் திறந்து மதுபான அறைக்குள் நுழைந்தாள். சந்திரிகா

அங்கே மதுபான பாட்டில்கள். அடுக்கி வைக்கப்பட்ட தரம் குறையாத தம்ளர்கள் என்று மெல்லிய ஒலியில் மயங்கிக் கிடந்த அந்த அறை. அறை முழுவதும் ஒருவிதமான போதை நெடி வீசிக்கொண்டிருந்தது. அளவுக்கு அதிகமாக குடிக்கும் சாரதியின் புலம்பல் பேச்சு சந்திரிகாவின் காதில் விழ

ஏன் இப்படி பேசுறீங்க? யார் சொல்லி நீங்க தான் கேட்கிறத இல்லையே ?உங்களுக்கு குடிதான் குடும்பம்னு ஆகிப்போச்சு. எங்கள என்னனு கூட கேக்குறதில்ல. மனைவி, குழந்தை எப்படி இருக்கிறிங்கன்னு பாக்குறதில்ல. சமூகத்தில உங்களுக்கு நல்ல பெயர் இருக்கு .எப்பவுமே இப்படி குடிச்சிட்டு இருந்தா, நல்லா இருக்கா என்ன? இது தப்புங்க. இந்த வீட்ல பூஜை அறை இருக்கு. சமையலறை இருக்கு. படுக்கையறை இருக்கு. கழிவறை கூட இருக்கு. அதெல்லாம் நம்ம தேவைக்கு மட்டும்தான இருக்குதுங்க. ஆனா இந்த மதுபான அறை தேவையில்லாதது. பூஜை அறை இருக்கிற இந்த இடத்துல இந்த மதுபான அறை இருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. இனிமேல் நீங்க குடிக்கிறத விட்டுருங்க. அப்பத்தான் நீங்க உயிர் வாழ முடியும்னு டாக்டர் கூட சொல்லியிருக்காரு. உங்க உடம்பு ரொம்ப கெட்டுப் போச்சு. நீங்க கொஞ்ச நாளைக்கு உசுரோட இருந்தாதான் எங்களுக்கும் நல்லது. நம்ம குழந்தைகளும் நல்லது .தயவு செஞ்சு இந்தக்குடி குடிக்கிறத நிப்பாட்டுங்க.

இந்த மதுபான அறையக் கூட நான் பூஜை அறையாக மாத்தலாம்னு இருக்கேன். தயவு செஞ்சு குடிய

விட்டுருங்க “என்று புலம்பிக் கொண்டிருந்தாள் சந்திரிகா .

அப்போது மதுபான அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

” அம்மா என்ன பண்ணிட்டு இருக்க? என்று கத்தினாள், சந்திரிகாவின் மகள் இலக்கியா.

” அப்பா, குடிச்சு குடிச்சு உடம்பக் கெடுத்துக்குறாரும்மா. டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா நான் சொன்னா அவர் கேட்க மாட்டேங்கிறார். குடிச்சிட்டே இருக்கார். அதுதான் அப்பாவுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று சந்திரிகா சொல்ல

“..ஓ “என்று அழுதாள் இலக்கியா.

” அம்மா, அப்பா இறந்து இரண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் நீ அவரையே நினைச்சுகிட்டு இருக்கியா? விட்டுரும்மா. நாம சொல்லிச் சொல்லிப் பாத்தோம்; அவர் குடிக்கிறத நிப்பாட்டல. கடைசில அந்தக் குடி தான் அவருடைய உசுர குடிச்சிருச்சு. நானும் இந்த மதுபான அறையை மாற்றலாம் என்று உன்கிட்ட சொல்றேன். நீ தான் வேண்டாம்னு சொல்ற ? ” என்று இலக்கியா சொன்னபோது ,

பேதலித்த புத்தி நிலையில் இருந்து சமநிலைக்குத் திரும்பிய சந்திரிகா எப்போதும் சாரதி அமர்ந்து குடிக்கும் அந்த நாற்காலியை பார்த்து அழுது புலம்பினாள்.

” உங்களை எவ்வளவு தொலைவு சொன்னேன் .குடிக்க வேண்டாம் குடிக்க வேண்டாம்னு இப்ப பாருங்க எங்களை எல்லாம் விட்டுட்டு போயிட்டீங்களே ?” என்று கதறினாள்.அவளை ஆதரவாக தொட்டுத் தேற்றினாள், இலக்கியா.

“அம்மா இந்த மதுபான அறைய பூஜை அறையா மாத்திரலாமா? என்று மதுமிதா கேட்க

“உங்க அப்பா இருக்கும்போது நான் அப்படித்தான் சொன்னேன். ஆனா அவரு வேண்டாம்னு சொல்லிட்டார். அவர் இல்லாதது நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. எப்பவுமே இருக்கிற இந்த மதுபான அறையில அவர் குடிக்கிற இடம் இருந்துட்டு போகட்டுமே ?அவர் நினைவா. நாம அப்பப்ப பாத்துக்கலாம். மதுபானம் அப்படிங்கறது தவறுதான். ஆனா அவர் குடிச்சிக்கிட்டு இருந்த அந்த இடம் நமக்கு புனிதமா தெரியுது.அவரோட இந்த மதுபான அறை அவராேட நினைவிடமா நம்ம வீட்டில் இருக்கட்டுமே ?” என்று சந்திரிகா சொல்ல, அதற்குப் பதில் ஏதும் பேசாத இலக்கியா சந்திரிகாவை மதுபான அறையில் இருந்து வெளியே கூப்பிட்டு வந்தாள்.

” ஏன் பொண்டாட்டி எப்பவும் சொல்லிகிட்டே இருப்பா. மது குடிக்காதீங்க .அது உடம்புக்கு கெட்டதுன்னு. நான் தான் கேட்கிறது இல்ல. எப்பவும் குடிச்சுக்கிட்டே இருக்கேன். இந்தக் குடியினால ஒரு நாள் ஏதாவது ஒரு முடிவு வரும்னு எனக்கு தெரியும். ஆனா அன்னைக்கு என் மனைவி, பிள்ளை வருத்தப்படுவாங்க” என்று எப்போதோ சாரதி பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் சந்திரிகாவின் காதில் விழுந்தன

அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் நாற்காலியைப் பார்த்துக் கண்ணீர் விட்டபடி ,மதுபான அறையை விட்டு இலக்கியாவும் சந்திரிகாவும் வெளியேறினார்கள்.மதுபான அறைக் கதவு சட்டென்று சாத்தப்பட்டது .

மறுநாள்,மெல்லிய ஒலியில் மயங்கிக் கிடந்தது, அந்த மதுபான அறை, அங்கு சாரதியின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மதுப்பாட்டில்கள் ஒன்று கூட அங்கில்லை. இதுவும் ஒருவகையில் சாமிஅறை போலிருந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *