டாஸ்மாக் கடைகளுக்கு நிர்வாகம் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 19–
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலாக 10 ரூபாய் தராவிட்டால் மதுபாட்டில் தர முடியாது என்று சில கடைக்காரர்கள் கூறும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்,
“மதுக்கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கும் மேல் வசூலித்து விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.