திருப்பூர், மே 30–
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.
திமுக உடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் வைகோவிற்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் துரைசாமி, இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
வைகோவுக்கு கடிதம் எழுதிய அவர், மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று தெரிவித்திருந்தார்.
திருப்பூர் துரைசாமி விலகல்
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முடிவை மறுத்த வைகோ, திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை அலட்சியப்படுத்துவதாக கூறினார். மதிமுக தொண்டர்கள் எண்ணம் அதுவல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் கடந்த மாதம் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பொது வாழ்க்கையில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் கூறிய அவர், பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்தார். மதிமுகவில் நீடிப்பதாகவே கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.