சினிமா செய்திகள்

மதம் சம்மந்தப்பட்ட பதிவு: ரசிகர்களின் கேள்விக்குப் பதிலடி கொடுத்த யுவன்

சென்னை, ஏப்.29

மதம் சம்மந்தப்பட்ட பதிவால் சர்ச்சைகளைக் கிளப்பிய ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் குரான் வசனம் ஒன்றைப் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், இந்தப் பதிவின் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். மேலும் அவர், “நான் உங்களை விரும்பியதும் பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தைப் பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, ‘‘வெளியேறிவிடுங்கள்’’ என்று பதிலடி கொடுத்தார்.

இது என் உரிமை

மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று ‘‘நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா?’’ எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். 
இதற்குப் பதிலளித்த யுவன், “நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவது ஆகும், திரைப் பிரபலங்களும் தனி மனிதர்களே, அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன, என் நம்பிக்கை என் உரிமை” என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு நபர் “புதிய மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்” என்று கமெண்ட் செய்திருந்தார்.

மதமும் இனமும் வெவ்வேறானவை

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக யுவன், “நான் உங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. 
மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்குப் புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார். 
யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பதிவும் கமெண்ட்டுகளும் விளக்கங்களும் தற்போது ஸ்கிரீன்ஷாட்டுகளாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *