செய்திகள்

மண் பானையில் பொங்கல் வைத்து விழா

தமிழர்கள் மண் பானைகளில் சமையல் செய்து உணவு உண்டவர்கள். இந்த மண் பானைகள் முற்றிலும் அழிந்து விடாமல் ஒரு சில இடங்களில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. கிராமப் புறங்களில் சில தமிழ்க் குடும்பங்கள் இன்றும் மண்பானை, மண் சட்டிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தானியங்கள் சேமித்து வைக்கும் பானைகள், சமையலுக்கான பொருட்கள் வைத்திருக்கும் பானைகள், அதன் பிறகு உணவுகள் பரிமாறுவதற்கும் உண்பதற்கும் பல்வேறு வகையான மண்ணாலான பாத்திரங்கள் போன்ற மண்பாண்டங்களை தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாகரீக வளர்ச்சியின் காரணமாக மண்பாண்டங்களின் பயன்பாடுகள் குறைந்து வருகிறது. தற்போது நவீன சாதனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு உலோக ,பிளாஸ்டிக் பாத்திரங்கள் பயன்படு த்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பொங்கல் திருநாள், கோவில் திருவிழா போன்ற விழா நேரங்களில் மண்பானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மண் பானைகளில பலவிதம் உண்டு. சந்திப்பானை, கலயம் , குண்டுப்பானை, மங்கலப் பானை, கதிர்ப் பானை, உறிப் பானை, ஓவியப் பானை, கரகப பானை, சோற்றுப் பானை, வெள்ளாவிப் பானை, பொங்கல் பானை, சட்டி, மூடித்தட்டு, பனியாரச்சட்டி போன்ற பல மண்பாண்டங்கள் உள்ளன. இந்த பானைகள் எல்லாம் தற்போது காணாமல் போனதும் பொங்கல் பானை ஒரு சில இடங்களிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

படுக்கை வாட்டில் தரையில் அமைக்க ப்பட்டுள்ள சக்கரத்தை சுற்றிக் கொண்டு அதில் வண்டல் மண், களிமண் சேர்ந்தக் கலவையை வைத்து லாவகமாக கைகளை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி தட்டித்தட்டிப் பிடிக்க… சில வினாடிகளில் அழகியப் மண்பாண்டங்களை உரு வாக்கி விடுவார்கள்மண்பானைத் தயாரிப்பவர்கள்.

இப்படி உருவாகும் பானைகளை, நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்து ‘காவி’ அடித்து, மீண்டும் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கிறார்கள். 35 நாட்கள் கழித்து மொத்தப் பானைகளையும் 4 மணி நேரம் சூளையில் வைத்து எடுத்தால், திடமானப் பானைகள் தயாராகும்.பொங்கல் திருநாளன்று கிராமங்களில் புதுப்பா னைகளில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து விட்டு பகுத்துண்டு வழிபடுவார்கள்.

முன்பெல்லாம் மண்பா னைகள் அடுக்கி வைத்து விற்பனை செய்வார்கள், ஆனால் நாகரிக வளர்ச்சியில் இன்றைக்கு மண்பானைகள் பல வண்ணங்களால் வர்ணம் பூசம்பட்டு அழகுற அடுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மண்பாண்ட பொருட்களின் இடத்தை அலுமினியம், பித்தளை, பீங்கான், எவர்சில்வர், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அலங்கரித்து கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றத்தால் மண்பாண்ட தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் பாரம்பரியத் தொழிலை கைவிட மனமில்லாத தொழிலாளர்கள் சிலர் மண்பாண்ட பொருட்களை நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் மானாமதுரை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழமாதேவி, நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள சுங்கான்கடை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் , தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சென்னை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இன்றும் பானைகள் செய்யப்பட்டு வருகிறது.மண் தட்டுப்பாடு, களிமண் விலையேற்றம், மண் எடுக்க வருவாய்துறை, காவல் துறை அனுமதி மறுத்தல் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இந்த மண்பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *