கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு
மண்டைக்காடு, மார்ச் 5–
மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறிநிலையத்துறையின்கீழ் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, த.மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மாசி கொடைவிழா 10 நாள் உற்சவத்தின் முதல் நாளான இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் மண்டைக்காடு அம்மனின் அருள் கிடைக்கின்ற சூழ்நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். மாவட்ட அளவில் நியமிக்கப்படவேண்டிய அறங்காவலர் குழுக்கள் மொத்தம் 38 வருவாய் மாவட்டங்களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் 4 நபர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
அந்த வகையில் இதுவரை 30 மாவட்டங்களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள குழு அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற 46-1 பிரிவு, 46-2 பிரிவு, 49-1 பிரிவுக்குட்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு அறங்காவலர் நியமிக்கின்ற பணியை மேற்கொள்ள இருக்கிறது. 46-3 பிரிவின்கீழ் இருக்கின்ற திருக்கோவில்களில் பரம்பரை அறங்காவலர்கள் 501 திருக்கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கின்ற பணியும் துவக்கப்பட்டுள்ளது. முழுமையாக அறங்காவலர் நியமிக்கின்ற பணி விரைவில் நிறைவடையும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறங்காவலர்களை நியமிக்கின்ற பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சுமார் 430 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 2400 திருக்கோவில்களுக்கு திருப்பணி நடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2500 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட பழமையான சுமார் 100 கோவில்களை திருப்பணிக்கு எடுத்துக்கொண்டு ஒரு கோவிலுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் 78 கோவில்களுக்கு நிதியுதவி வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, மீதமுள்ள 22 கோவில்களுக்கு நிதியுதவி வழங்க நிர்வாக அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியே 8 லட்சம் செலவில் மண்டைக்காடு கோவில் கலச பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கல்குளம் வட்டாட்சியர் கண்ணன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி உட்பட துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.