புதுடெல்லி, ஆக 1–
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இருஅவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20–ந்தேதி துவங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் இரு சபைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 8வது நாளான நேற்று இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பிற்பகலில் அவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார்’ என மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிராகரித்த எதிர்க்கட்சிகள், ‘பிரதமர் பங்கேற்கும் விரிவான விவாதத்தை நடத்தினால் மட்டுமே சபை இயங்க அனுமதிப்போம்’ என, பிடிவாதம் பிடிப்பதால் மழைக்கால கூட்டத் தொடரில் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் 9வது நாளான இன்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் தொடர் கூச்சல், குழப்பம் நிலவியதால், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.