எதிர்க்கட்சிகள் அமளி; -வெளிநடப்பு
புதுடெல்லி, ஜூலை 4–
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் மக்கள் உங்களை நிராகரித்துவிடுவார்கள் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
18-–வது நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் நேற்று முன்தினம், எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அதைத்தொடர்ந்து மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:–-
ஓர் அரசு தொடர்ந்து 3-வது முறை பதவி ஏற்றுள்ளது, கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
இன்று அரசியல் சாசனத்தை தூக்கிப்பிடிப்பவர்கள், அரசியல் சாசன தினம் கொண்டாடுவதை எதிர்த்தனர். காங்கிரஸ் ஆட்சியில்தான் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு மிகப்பெரிய எதிரி காங்கிரஸ் கட்சிதான்.
மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.
மணிப்பூர் வெள்ளச் சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் உங்களை (காங்கிரஸ்) நிராகரித்துவிடும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோடியின் உத்தரவாதம்
மேற்குவங்காளத்தில் சமீபத்தில் ஒரு பெண் பகிரங்கமாகத் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பது கவலைக்குரியது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் யாரையும் விடமாட்டோம். அதுபோல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இதற்காக விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது. இது மோடியின் உத்தரவாதம்.
விசாரணை அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் கூறுகிறார்கள். ஆம் ஆத்மிக்கு எதிராக குற்றச்சாட்டை கூறியது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்ததும் இருவரும் ஒரே அணியில் சேர்ந்து எங்களை குறை கூறுகிறார்கள்.
இதற்கு முந்தைய காலங்களில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி நடந்தது. காங்கிரஸ் தற்போது கூட்டணி கட்சிகளின் வாக்குகளை பெறும் ஒட்டுண்ணியாக மாறிவிட்டது.
தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் அந்த கட்சிக்கு தோல்வியை தாங்குவதற்கு தலித் தலைமையை வைத்துள்ளது. சபாநாயகர் தேர்தலில் தோற்போம் என்று தெரிந்து, தலித் தலைவரை வேட்பாளராக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவமதித்தனர். நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியையும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம், கடைசி கட்டத்தில் உள்ளது, எஞ்சியுள்ள பயங்கரவாத வலையமைப்பை அகற்ற தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் அதிக அளவில் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்க அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கு குடிநீர் வழங்கிய மோடி
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் பதில் அளித்தபோது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர்.
இதனால், உரையை நிறுத்திவிட்டு அமைதியாக நின்றிருந்த பிரதமர், தனது இருக்கையின் அருகே, அவையின் மையப் பகுதியில் நின்று கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி. ஒருவருக்கு குடிநீர் கொடுத்தார். ‘வேண்டாம்’ என்று கூறி மறுத்த அவர் கைகூப்பி நன்றி தெரிவித்தார். அதற்குள், வேறொரு எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர், பிரதமர் கொடுத்த குடிநீரை வாங்கி குடித்தார். பிரதமரும் தன்னிடம் இருந்த குடிநீரை அருந்திவிட்டு, உரையை தொடர்ந்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.