புதுடெல்லி, ஜூன் 22–
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வருவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். மகளிர் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தேன். மணிப்பூர் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம். இங்கு விரைவில் அமைதி திரும்பும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், மணிப்பூர் வன்முறைக்கான காரணங்கள், வன்முறை தொடர்பான நிகழ்வுகள், அதில் அரசு அலுவலர்கள் யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக கவுகாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லாம்பா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்தது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷூ சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் பிரபாகர் அடங்கிய இந்தக் குழு ஆறுமாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.