உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்
டெல்லி, ஜூலை 11–
மணிப்பூரில் நடைபெற்ற 5 ஆயியிரம் வன்முறை சம்பவங்களால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவையை மீண்டும் கொண்டு வரவும் இணையதள சேவையை துண்டித்ததை உடனே திரும்ப பெறவும் உத்தரவிட்ட மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மணிப்பூர் மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
5,000 வன்முறை சம்பவம்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 142 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 ஆயிரம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 745 பேர் விசாரணைக்காக கஸ்டடிக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 6 வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ‘மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக நிலவரம் மாறிவருகிறது. எந்தவொரு தவறான தகவலும் மணிப்பூரின் நிலமையை மேலும் மோசமடைய செய்யும். தற்போது ஒன்றிய அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் நிலைமை சீரடைந்து வருகிறது’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.