டெல்லி, ஜூலை 3–
மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாகவே, ஒன்றிய அமைச்சரை தோற்கடித்து நான் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கல்லூரி பேராசிரியர் நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சியமைத்த நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி பிமோல் அகோய் பேசியது தற்போது வைரலாகியுள்ளது.
கோபத்தின் வெளிப்பாடு நான்
அதில் அவர் “மணிப்பூரில் சுமார் 60 ஆயிரம் மக்கள் இன்னமும் முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் கோபமும், அவஸ்தைகளும் சேர்ந்து சாதாரண மனிதனான என்னை ஒரு அமைச்சரை வீழ்த்த வைத்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. ஆனால் நமது பிரதமர் மணிப்பூர் விஷயத்தில் மவுனம் காக்கிறார். ஜனாதிபதி உரையில் கூட மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லை. இந்த அமைதி சாதாரணமானது அல்ல.
மவுனம்தான் மணிப்பூர் மக்களிடம் நீங்கள் பேசும் மொழியா? உங்கள் நெஞ்சில் கை வைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களை, ஏழை தாய்மார்களை, விதவைகளை பற்றி யோசித்து பாருங்கள். பிரதமர் மணிப்பூரை பற்றி பேசத் தொடங்கினால் நான் அமைதி ஆகி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மணிப்பூர் எம்.பியான பிமோல் அகோய் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக ஒன்றிய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.