மும்பை, ஜூன் 19–
சொந்த நாட்டு மக்கள் கலவரத்தால் மரணமடைவதை தடுக்க மணிப்பூர் மாநிலம் செல்லாதவர், 5 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 21 ந் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 21ம் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையும் பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.,தலைமையகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கிறார். அடுத்த நாளான ஜூன் 22 இல், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.அடுத்தடுத்த நாள் பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
மணிப்பூர் செல்லவில்லை
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மோசமான கலவரம் அரங்கேறி வருகிறது. சொந்த நாட்டு மக்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். அங்கு பிரதமர் மோடி செல்லவில்லை, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதையெல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு பயணம் செல்கிறார் என மோடியை உத்தரவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.