ஆர்.முத்துக்குமார்
மணிப்பூர் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு கலவர சிக்கல்கள், கற்பழிப்பு சம்பவங்கள், வாகனத்திற்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவை ஊடகங்களில் இடம் பிடித்து வருவதை அறிவோம்.
மத்திய அமைச்சர்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வந்தாலும் மக்களிடம் இதுபற்றி பிரதமர் மோடி ஏதும் கூறாது இருக்கிறாரே? என்று ஆதங்கம் ஏற்பட்டு இருப்பது தான் உண்மை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச வேண்டும்; எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும் என கோரி வருகிறார்கள்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் 10 மாதங்களில் வர இருப்பதால் அரசியல் ரீதியாக இப்பிரச்சினை தேசியத் தலைவர்களால் கையாளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசின் மீது மக்களவையில் காங்கிரஸ் முன்மொழிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்கப்பட்டுள்ளது. இதற்கு சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர்.
‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பியும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்தத் தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார்.
அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.
மணிப்பூரில் மெய்தேய் – குக்கி சமூகங்களுக்கு இடையிலான மோதலால் விளைந்த வன்முறை, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்வது வேதனைக்குரியது. பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களும் பல நாட்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
மணிப்பூரில் மெய்தேய் –குக்கி சமூகங்களுக்கு இடையிலான மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொடர் வன்முறைகளுக்கான காரணிகள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும். மெய்தேய் –குக்கி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் வன்முறையில் பங்கிருக்கிறது என்றாலும் மாநில அரகம் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் பீரேன் சிங்கும் குக்கி சமூகத்தினரின் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். குக்கி சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்னும் குரல்கள் வலுக்கத் தொடங்கி உள்ளன.
இந்தப் பின்னணியில் அனைத்து சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக பார்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு உடனடியாக கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது. பிரதமர் மோடி உடனடியாக தனது கருத்துக்களையும் அமைதி திரும்ப திட்ட வரைவையும் அறிவித்தால் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.