இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்
டெல்லி, ஜூலை 14–
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கிறார். இந்த நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
அந்தத் தீர்மானத்தில், “மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறியிருக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை விட்டு முகாம்களில் தங்கியிருக்கிறார்கள், புலம் பெயர்ந்திருக்கிறார்கள். சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
மணிப்பூரில் நடைபெறும் வன்முறைகள் இன, மத ரீதியாக நடைபெறுகிறது. முக்கியமாக இந்துக்கள் அதிகம் இருக்கும் மெய்தி இன மக்களுக்கும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் குக்கி இன மக்களுக்கும் இடையில் வன்முறை நீடித்து வருகிறது. பொது சொத்துக்கள், வழிபாட்டு தளங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இனவாத கொள்கைகள்
இந்த வன்முறைத் தொடர்பாக மனித உரிமைக் குழுக்கள் அளித்திருக்கும் அறிக்கையில், இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசு, தேசிய அளவில் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும், பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றன. இதன் காரணமாகதான் சில மதங்களைச் சேர்ந்தவர்களை நசுக்குவதாகத் தெரிகிறது.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கலவரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குறிய விதத்தில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மாநிலத்திருலிருந்து திரும்பப்பெற வேண்டும். மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட வேண்டும்” எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்தத் தீர்மானத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து அறிந்தோம். இந்தியாவின் உள் விவகாரங்களில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இத்தகைய தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இது காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.