செய்திகள்

மணிப்பூரில் 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை: 3 பேர் பலி

இம்பால், ஜூன் 30–

மணிப்பூரில் 2 வாரங்களுக்கு பிறகு, மீண்டும் வன்முறை உச்சத்தைத் தொட்ட நிலையில், பாதுகாப்புப் படையினர் வன்முறையாளர்கள் மோதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3 ந்தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை. இந்த மோதலில் பொதுமக்களில் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 16 நாட்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

3 பேர் சுட்டுக்கொலை

இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஹராதெல் கிராமத்தில் கலவரக்காரர்கள் நேற்று காலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு இரவில் திடீரென நூற்றுக்கணக்கானோர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *