இம்பால், ஆக. 5–
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பீரன் சிங் உள்ளார். இங்குள்ள மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறுகின்றனர். பாரதீய ஜனதாவும் அதரவு தெரிவித்து தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றனர். இதுதொடர்பாக 2 இனக்குழுக்களுக்கும் கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. வன்முறை 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
3 பேர் பலி
இத்தகைய சூழலில் தான் அண்மையில் மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் புதிதாக வன்முறை வெடித்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதோடு வன்முறையில் குக்கி பழங்குடியின மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.