இம்ப்ஹல், ஜூன் 12–
மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணிப்பதாக குக்கி இன மக்கள் அறிவித்துள்ளனர்.
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே தலைமையில் 50 பேர் அடங்கிய அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முதலமைச்சர் பிரேன் சிங், அமைச்சர்கள், எம்.பி-க்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சரிடம் அமைதி குழுவை புறக்கணிப்பதாக குக்கி இனக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அமைதி பேச்சுவார்த்தையா?
குக்கி இன மக்களுக்கு எதிராக வன்முறை தொடரும் போது, மணிப்பூர் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே மலை பிரதேசத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்காக தனி நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குக்கி இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ-கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் 3-ம் தேதி பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பாக மெய்தி, குக்கி இனக் குழுவினர் இடையே வன்முறை வெடித்தது.
ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த வன்முறை, ராணுவத்தின் உதவியோடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கலவரத்தில் 105 பேர் உயிரிழந்த நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுமார் 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி 350 அரசு காப்பகங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சமூக விரோதிகள், சமூக ஊடகங்கள் மூலமாகவும் வதந்திகளை, போலி விடீயோக்களை பரப்புவதை தடுக்க, 15-ம் தேதி வரை இணைய சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்