ஆர்.முத்துக்குமார்
பசுமை எழில் சூழ, அமைதியும் சுத்தமான சுவாசக் காற்றும் நிரம்பிய நமது மலைப் பிரதேசங்களில் மணிப்பூர் முத்தாய்ப்பானது, ஆனால் இது சமீபமாக மதவெறி, இனவெறி தாக்குதல்களால் கலவர பிரதேசமாக மாறியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்து வந்த மணிப்பூர் கலவரங்கள் ஏனோ பிரதமர் மோடியின் தரப்பில் இருந்தோ, அல்லது நேரடி கருத்தோ வெளிவராதது அரசியல் களத்திலும் பொதுமக்கள் தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தி விட்டது.
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி கொண்டிருந்த காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளின் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி இதை ஓரு பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தி மழைக்கால கூட்டத்தொடரை நடக்க விடாமல் முடக்கியும் வருகிறார்கள்.
எதிர்கட்சியினர் கோருவது மணிப்பூர் பற்றிய பிரதமரின் அறிக்கையையும் விவாதத்தையும் தான்.
மணிப்பூர் பங்களாதேஷ் எல்லையை அருகாமையில் கொண்டிருக்கிறது. இரு நாட்டு பிரஜைகளும் வாழ்வாதாரத்திற்காக எல்லையை கடந்து விடுவதும் வாடிக்கை.
இதை சாதகமாக பயன்படுத்தி தீய சக்திகள் போதைப் பொருட்கள் கடத்தல், தீவிரவாதத்திற்கு ஆள்சேர்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிவர்த்தனைகள், ஆயுத பேரங்கள் என பல்வேறு சமாச்சாரங்களையும் அரங்கேற்றியும் வருகிறார்கள். சர்வதேச நாச சக்திகள் தஞ்சம் புகும் பிரதேசமாகவும் இருப்பதை கண்டு மத்திய அரசு விசேஷ கண்காணிப்புகளை அதிகப்படுத்தி வருவது தான் உண்மை.
தீய சக்திகள் தங்களது மீது இருக்கும் கண்பார்வையை நீக்கிடவே இப்படிப்பட்ட இனவாத கலவரங்களை தூண்டிவிட்டு அதை மேலும் அணையாது எரிய அரசியல்வாதிகளையும் தூண்டி விட்டு இருக்கலாம்.
ஆக இது மத்திய அரசின் நேரடி கண்பார்வையில் தேசிய நலன் காக்கும் அதிமுக்கிய ரகசிய யுத்தமாகவே இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் பிரதமரால் எப்படி நிலைமையை ஊரறிய பல்வேறு சமாச்சாரங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியும்? அதனால் தான் மவுனமாக இருக்கிறார் என்றும் இதுபற்றிய அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
சென்ற வாரம், 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். இதையடுத்து கோரிக்கை மனுவை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர். அவர்கள் கண்ட காட்சிகளை வைத்து தயாரித்துள்ள ஓர் அறிக்கையையும் அம்மாநில கவர்னரிடம் சமர்பித்து உள்ளனர். அதில் 5 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ளனர்.
இனமோதலை கட்டுக்குள் கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனம் அவரது அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த சில நாட்களாக இடைவிடாத துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து சமூகத்தினர் இடையேயும் கோபமும் தனித்துவிடப்பட்ட உணர்வும் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் அனைத்து பயனுள்ள நடவடிக்கைகளையும் உடனே மேற்கொண்டு மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பழங்குடியினராக மெய்தி சமூகத்தினர் உரிமை கோர முடியாது என குக்கி சமூகத்தினரும் மியான்மரில் இருந்து குக்கி சமூகத்தினர் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என மெய்தி சமூகத்தினரும் கூறினர். அவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடி அடுத்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் அம்மாநிலத்தில் உள்ள நிலைமையையும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் தெளிவாக விவரிப்பார் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.