திருச்சி, பிப். 1–
மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி நேற்றிரவு ஆம்னி பேருந்து கிளம்பியது. இன்று அதிகாரை மணப்பாறை அருகே யாகபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்க உதவினர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பயணிகளை மீட்டு தீ பற்றி எரிந்துகொண்டிருந்த பேருந்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 15 பயணிகளை அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிரிக்கப்பட்டது. இதற்கிடையே சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானாது.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் திருச்சி -– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீண்டும் கார் விபத்து
பேருந்து விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் ஒரு கார் விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து நடைபெற்றிருக்கும் நிலையில், இந்த பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.