செய்திகள்

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை: மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்

மும்பை, ஏப். 17–

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று, மகாராஷ்டிரா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதால் அவற்றை அகற்றவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடந்த 2-ம் தேதி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதனால் ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ராஜ் தாக்கரே கட்சியினர் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். அதோடு, மே 3 ந்தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்ற வேண்டும் என்று ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசுக்கு கெடு விதித்திருக்கிறார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்தாக்கரேயை பா.ஜ.க ஆட்டி வைப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

மீறினால் நடவடிக்கை

இந்த நிலையில், ராஜ்தாக்கரேயின் கெடு குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் அளித்த பேட்டியில், மசூதி மற்றும் கோயில்களில் இருக்கும் ஒலி பெருக்கிகள் அகற்றப்படமாட்டாது. யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட சத்தத்தில் ஒலி பெருக்கியை பயன்படுத்தவேண்டும் என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார்.

இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், “ராஜ்தாக்கரே ஒலி பெருக்கி தொடர்பாக தெரிவித்த கருத்துகள் திட்டமிட்டு மத பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். மத வன்முறையை ஏற்படுத்தி கலவரத்தை உண்டு பண்ண முயல்கின்றனர் என்று தெரிவித்தார். ராஜ்தாக்கரேயை சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் “மகாராஷ்டிராவின் ஒவைசி” என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடக்கத்து.

Leave a Reply

Your email address will not be published.