புதுடெல்லி, நவ.23–
திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் அங்கு ஓட்டல் உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வசதிகளுடன் இருக்கும் அவருக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறுகையில்,
ஜெயினுக்கு முதுகுத்தண்டுவடக் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருவதாக கூறினார். மேலும், சட்டவிரோதமாக இது போன்ற சுகாதார விவகாரங்கள் தொடர்புடைய சிசிடிவி காட்சி பதிவுகளை கசிய விட்டு மலிவான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதில், ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபர் ரிங்கு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2021-ல் ஜேபி காலன் பகுதியில் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவா் பிசியோதெரபிஸ்ட் இல்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சத்யேந்தர் ஜெயின் 28 கிலோ எடையைக் குறைத்ததாகக் கூறிய மறுநாள், திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட விதவிதமான உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.