அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை
சென்னை, ஜூலை12-
சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும், வலுவான கூட்டணியை அமைப்போம்; பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், 2-வது நாளான நேற்று காலை சிவகங்கை, வேலூர் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை, வேலூர் நிர்வாகிகள் கூட்டம்
சிவகங்கை தொகுதி நிர்வாகிகளுடனான கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், வேலூர் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் நடைபெற்றது. மாலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தின் போது அண்ணா தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கான உறுப்பினர் அட்டையையும், புதுப்பித்தவர்களுக்கான உறுப்பினர் அட்டையையும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பவம் உள்பட எவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் நம்மை தான் விமர்சனம் செய்வார்கள். எனவே, கட்சி நிர்வாகம் பற்றிய எந்த விவாதங்களும் பேச வேண்டாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நமக்கு சாதகம்
நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. ஆளும் தி.மு.க. கட்சியின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தல் களம் நமக்கு சாதகமாக உள்ளது. எனவே, நீங்கள் எல்லோரும் நினைப்பது போல் மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் அமைப்போம். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்போவது இல்லை.
மேல்மட்ட நிர்வாகிகள் தங்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடியும். ஒன்றிய செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் வாக்குகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஊராட்சி, பேரூராட்சிகளில் கிளைக் கழக அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டும். அதே நேரத்தில், கட்சியின் தகவல் தொடர்பு அணியை வலுப்படுத்தும் வகையில், அதிகபடியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கட்சியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
3வது நாளாக ஆலோசனை
இன்று காலை அரக்கோணம், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், மாலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது.