செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை மட்டும் பேச வேண்டும்; யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது

Makkal Kural Official

த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

சென்னை, ஜன. 7–

மக்கள் பிரச்சினைகளை மட்டும் பேச வேண்டும், யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று த.வெ.க. நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து கட்சி தலைவர் விஜய்யை முதல் வராக்குவதே நமது லட்சியம் என தொண்டர்கள் மத்தியில் புஸ்சி ஆனந்த் பேசி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மாவட்டங்களில் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்து மட்டுமே பேசவேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களை தாக்குவதை போல பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.

கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *