அது ஒரு நகராட்சி அலுவலகம். அதில் சுகாதார பிரிவு ஒன்று இருக்கிறது. அங்கு தூய்மைப்பணியாளர்கள் பணிபுரியும் அலுவலகம். சாலையை கூட்டி குப்பைகள் அள்ளப்படுவதும் வீடுவீடாக குப்பைவண்டிகள் மூலம் குப்பைகளை பெற்று அவற்றை ஒழுங்குமுறையில் சேர்த்து தரம் பிரிப்பார்கள்.
அந்த வார்டு அலுவலகத்தில் நாற்பது தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்தனர். அதில் மாடசாமி என்ற ஊழியரும் வேலை பார்த்தார். நிரந்தர பணி தூய்மைப் பணியாளராக அவர் பணிபார்க்கின்றவர் இருபத்தைந்து வருடங்களாக வேலை செய்து வருகிறார்.
அதிகாரிகளிடமும்வேலை செய்யும் தெருக்களில் குடியிருக்கும் பொதுமக்களிடமும் நல்லவிதமாக பேசிவருபவர் மாடசாமி.
ஒரு நாள் காலை ஆறு மணி. சுகாதார அதிகாரி திடீரென்று வார்டு அலுவலகத்திற்கு வருகைதந்தார். வந்தவர் சுகாதார ஆய்வாளரிடம் இப்போது மழை சீசன்ஸ் “பக்கத்து மாவட்டத்துல புயலும் மழையும் வந்து நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கு! அங்க நம்ம அலுவலகத்திலிருந்து சுகாதார ஊழியர்களை கேட்டிருக்காங்க. நம்ம வார்டு ஆபிஸ்ல இரண்டு பேர்கள் போகணும்!
“அந்த ஊர்ல புயல் அடிச்ச ஏரியாவுக்கு போய் சுகாதார பணிகள் பார்க்கணும்! ஒவ்வொரு வார்டு ஆபிஸிலிருந்து ரெண்டு ஊழியர்களை கேட்டிருக்காங்க. ரெண்டு ஊழியர்கள் நல்ல ஊழியராய் அதுவும் இருபது வருடங்களுக்கு மேல வேலை பார்த்தவங்கள ரெடி பண்ணுங்க” என்று கூறினார்.
அதற்கு சுகாதார ஆய்வாளர் “சரிங்க சார் நான் நாளைக்கு ரெண்டு நல்ல ஊழியர்கள புயல் அடிச்ச மாவட்டத்துக்கு அனுப்பிடுறேன் “என்றார்.
சுகாதார அதிகாரி தகவல்தெரிவித்து விட்டு புறப்பட்டார். அவர் சென்று சிறுதுநேரம் கழித்து சுகாதார ஆய்வாளர் பணிபுரியும் ஊழியர்களை அழைத்தார். உடனே எல்லோரும் வந்தனர்.
அவர்களிடம் “இப்போ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நம்ம அதிகாரி ஒரு விசயத்தை பத்தி சொல்லிட்டுபோய் இருக்காரு. பக்கத்து மாவட்டத்துல புயல்மழை அடிச்சி நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அங்க போய் நம்ம சுகாதார ஊழியர்கள் வேலை பாக்கணுமாம்!
இது இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அங்கே ஊழியர்கள் போய் ஆகணும். பாதிக்கப்பட்ட ஊர்ல அந்த மக்களுக்கு தேவையான உதவிகள், சுகாதார பணிகள், அவசர உதவிகள் இப்படி ஒவ்வொரு பணி பார்க்க நம்ம ஊழியர்கள் போகணும்!
இது வழக்கமான மழை சீசன்ல வர்ற பணிதான். இது ஒரு சமுக சேவை மாதிரிதான். அங்க கஷ்டபடுறவங்களுக்கு உதவுற இந்த வேலைக்கு நம்ம சுகாதார வார்டு ஆபிஸ்ல இருந்து வரிசைப் பிரகாரம் தான் ரெண்டு ஊழியர்கள அனுப்புவோம்! இந்த வருசம் நம்ம மாடசாமியும் வேலும் போகணும்! ” என்றவர்,
‘‘மாடசாமி, வேலு என்முன்னாடி வாங்க” எனச் சொன்னதும் மாடசாமியும் வேலும் சுகாதார ஆய்வாளர் முன்பு நின்றனர்.
“நீங்க ரெண்டு பேரும் பக்கத்து மாவட்டத்துக்கு போறதுக்கு ரெடியா இருங்க” என்றார்.
இதைக்கேட்டு மாடசாமி என்ற சுகாதார ஊழியர் “அய்யா என் மகளுக்கு சடங்கு விசேசம் வச்சிருக்கேன்! நீங்க சொல்லக்கூடிய தேதியில நான் அங்கபோக முடியாத சூழ்நிலை வேற யாராவது அனுப்புங்கய்யா!” என்று மாடசாமி சொன்னதும்
சுகாதார ஆய்வாளர் “அதெல்லாம் முடியாது மாடசாமி. நீ போய் தான் ஆகணும். ரூல்ஸ மாத்தமுடியாது!” என்றார்.
“அய்யா. மகளுக்கு விசேசம் வச்சுயிருக்கிறனாலதானே கேட்குறேன். தயவு செஞ்சி வேறஆள் அனுப்புங்க “
” நீ. சொல்லுறதை நான் இப்ப கேட்குற நிலையில் இல்லை! வேற வழியே இல்லை. நீயும் வேலும் போய்தான் ஆகணும்!
இதுக்கு முன்னாடி போன வருசம் வேற ஊழியர்க போனாங்க! இப்ப இந்த வருசம் நீ தான் போகணும்! கண்டிப்புடன் பேசினார்!
அய்யா மகளுக்கு சடங்கு விசேசம் வச்சிருக்கேன் நான் எப்படி போக முடியும்? என்று கெஞ்சும் குரலில் பேசினார்., மாடசாமி!
“அதெல்லாம் முடியாது! உன் பேரை பதிவு பண்ணியாச்சி அதிகாரியே சொல்லிட்டு போயிட்டாரு இதுக்குமேல பேசுனுமுன்னா அதிகாரி கிட்ட கேட்டுக்க! “பட்டென்று பேசினார் சுகாதார ஆய்வாளர்.
பதில் பேச முடியாமல அதிர்ச்சியுடன் மாடசாமி நின்றார்!” சரி நான் அதிகாரிகிட்டே பேசிக்கிறேன் “என்றுக்கூறி விட்டு அன்று மதியமே மாடசாமி சுகாதாரஅதிகாரியிடம் சென்று பார்த்து தன் நிலையை எடுத்து சொல்லிபார்த்தார்! ஆனால், அவரும் முடியாது என்றுக் கூறிவிட்டார்! மாடசாமிக்கு கை கால்கள் ஓடவில்லை! குழம்பிய நிலையில் ஆகிவிட்டார் !
“சுகாதார அதிகாரியும் இப்படி சொல்லி விட்டாரே! நான் என்ன செய்வேன்? என் மகள் சடங்கு விசேசத்தை எப்படி நடத்துவேன்? அதுவும் நான் இல்லாமல் விசேசமா? ஒரே கவலையில் மூழ்கினார் மாடசாமி.
மாடசாமி தனிப்பட்ட முறையில் மகள் சடங்கு விசேசத்திற்கு விடுப்புக்கு எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை!
அந்தக் கவலையில் வீடு வந்து சேர்ந்தார். அவர் வரும்போதே புலம்பிக்கோண்டே வீட்டினுள் நுழைந்தார் !அவர் தோற்றத்தைபார்த்த மனைவி பாக்கியம், “ஏங்க. ஏன் சோகமா வர்றீங்க ? எனக்கேட்க மாடசாமி தன்னுடைய ஆதங்கத்தை அடக்கமுடியாமல், “பாக்கியம் நம்ம மகள் சடங்கு விசேசத்துக்கு எனக்கு லீவு கிடைக்காதாம். பக்கத்து மாவட்டத்துல புயல்மழை பேஞ்சதுனால நான் அங்கே போய் வேலை பாக்கனுமாம். இது அதிகாரியோட உத்தரவு !”
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள் பாக்கியம்!” என்னங்க சொல்றீங்க? மகள் சடங்குக்கு லீவு கிடைக்காதா? இது என்னங்க அநியாயமா இருக்கு!
“ஆமாம் பாக்கியம் இது பெரிய கொடுமையா தான் இருக்கு! நானும் எவ்வளவோ மன்றாடி பாத்துகேட்டேன் பாவி மனிசன்ங்க லீவுதரமுடியாதுன்னு பிடிவாதமாக சொல்லிட்டாங்க.
“இது ரொம்ப முக்கிய பணி. அவசியம் போய் தான் ஆகணுமுன்னு சொல்றாங்க!
மகள் சடங்குக்கு நான் இல்லையின்னா என்னை ஊர்காரங்க ஒரு மாதிரியா பேசுவாங்கன்னு சொன்னதுக்கு,
உனக்கு ஊர்க்காரங்களா சம்பளம் கொடுக்குறாங்க? அங்கே ஊரை மழையில போராடிட்டு இருக்காங்க உனக்கு லீவு முக்கியமா?ன்னு பேசுறாங்க பாக்கியம்!
ஏன் தான் இந்த சுகாதார வேலைக்கு சேர்ந்தோமுன்னு இப்ப நினைக்கவேண்டியதிருக்கு. ஒரு நல்லது கெட்ட துக்கு போக முடியல பேசமா இந்த வேலையை வேண்டாம்னு ன்னு தோணுது !”
மாடசாமி தன் மனைவி பாக்கியத்திடம் வேதனையுடன் பேசும் பேச்சுகளை பக்கத்து அறையிலிருந்துகேட்ட பவ்வியா விருட்டென்று வேகமாக பெற்றோரை நோக்கி வந்தாள் !
“அப்பா! நீங்க அம்மாகிட்ட பேசின விசயத்தை கேட்டேன். எனக்கு ரெம்ப வருத்தமா தான் இருக்கு! ஆனா, ஒரு விசியத்தை நினைச்சா அதுக்காக நீங்க வேலைக்குபோய் தான் ஆகணும்பா !
மகள் பவ்வியா சொன்னது கேட்டு மாடசாமி அதிர்ந்தார்!” என்னம்மா சொல்றே நான் லீவு எடுக்காம வேலைக்கு போகணுமா? எனக்கு ஒன்னும் புரியல !
“ஆமாம்பா நான் நல்லா யோசிச்சி தான் சொல்றேன். என்னோட சடங்கு விசேசத்தை காட்டிலும் பக்கத்து மாவட்டத்துல புயல் மழை வந்து அங்கிருக்கிற ஜனங்க கஷ்டபடுறதை நினைச்சா மனசு தாங்கலப்பா !
எத்தனை பேரு வீடு வாசல் இழந்து தங்குறதுக்கு இடமில்லாம குழந்தை குட்டிகள் வயசான வங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ பாவம்பா !
சாப்பாடில்லாம மருந்தில்லாம எத்தனைபேர் வேதனைபடுவாங்க! அவங்களுக்கு இந்தமாதிரி நேரத்தில் தானே உதவி பண்ணணும் !
அரசாங்கம் இதுக்காகத் தானேஅங்கிருக்குற மக்களுக்கு உதவ உங்கள் மாதிரி ஆளுக போக சொல்லுது! நாமலே இந்த நேரத்தில போகமா இருந்தா எப்படிப்பா ?
அவங்களுக்கு தங்க இடம் கொடுக்குறதும் சாப்பாடு கொடுக்குறதும் மருந்து மாத்திரை கொடுக்குறதும் இப்படி சின்ன சின்ன உதவி செய்றதுனால நமக்குத்தானே பெருமை !
இதே நேரத்தில் நம்ம சொந்தக்காரங்க அங்க அவதிபட்டாங்கன்னா சும்மா இருப்போமா ? அவங்களையும் சொந்தக்காரங்களா நினைச்சி பாருங்கப்பா !
ஆபத்து காலத்துல மனிசனுக்குள்ள உதவி பண்றது தானே நியாயம்! அதுதான் மனிதநேயம் நம்ம மாவட்டத்துல ஒரு பிரச்சினையின்னா அந்த மாவட்டத்துக்காரங்க வந்து உதவி தானே செய்வாங்க அவங்களும் மனிசன்ங்கதானே இப்படி ஓருத்தர்க்கொருத்தர் உதவி செய்றதுதானே வாழ்க்கை! என்னோட சடங்கு விசேசத்தை எப்பவேணுமுன்னாலும்நடத்தலாம் !
ஆனா, ஆபத்துக்கு உடனே உதவி செஞ்சி தானே ஆகணும் ! இதை நகராட்சி வேலையா ஏன் நினைக்கிறீங்க? மனிதனுக்கு செய்ற தொண்டா நினைச்சி போங்கப்பா !
சடங்கு விசேசம் நம்ம பெரியப்பா, சித்தப்பா, மாமா எல்லா சொந்தக்காரங்களும் சேர்ந்து நடத்துவாங்கறீங்க அங்க போய் பாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு உதவிசெய்றது தான் எனக்கு பெருமை! சரியா என்று மகள் பவ்வியா சொல்லவும் மாடசாமி சிலையாகி வாயடைத்து போய்விட்டார்!
“அம்மா பவ்வியா! நீ என் மகள் கிடையாதும்மா, தெய்வப்பிறவிம்மா எனக்கு நீ சொல்லவும் தான் ஒவ்வொரு விசயம் புரியுதுமா. யாருக்குமே இல்லாததங்க மனசு உன்கிட்ட இருக்கும்மா நீ நல்லா இருப்போம்மா !
கஷ்டபடுறவங்களை மனசுல நினைச்சி அவங்களுக்கு உதவிசெய்ய நீ பேசுனபேச்சுகளை நினைச்சா எனக்கே பிரம்மிப்பா இருக்கு யாரும் இப்படி பேசமாட்டாங்கம்மா
சரிம்மா பவ்வியா! அப்பா புயல் மழையில கஷ்ட படுறவங்களுக்கு நகராட்சி மூலமா நானும் என்னோட உழைப்பை செய்ய போறேம்மா. அதை என்னோட சேவையா செய்யப்போறேம்மா உடனே நான் ஆபிஸ்ல நானும் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு வர்றேன்! “தன்னுடைய அறிவுக் கண்களைத் திறந்த மகளை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டே அலுவலகத்தை நோக்கி நடந்தார் மாடசாமி!