செய்திகள்

மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்மா அரசு: அமைச்சர் பென்ஜமின் பேச்சு

சென்னை, பிப். 26–

மக்கள் நலனை பற்றி சிந்திக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு என்று ஊரக தொழல்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு பெருகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை குழப்ப பார்க்கிறார். மக்களிடம் இது எடுபடாது. மக்கள் எங்கள் பக்கம் என்றும் பென்ஜமின் கூறினார்.

ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளையொட்டியும், தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கியும் மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் கங்கா நகர் பிரதான சாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநாடு போன்று மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் குறிப்பாக தாய்மார்களும், தொண்டர்களும், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுரவாயல் பகுதி கழக செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அம்மாவின் பிறந்தநாள் என்றாலே மக்களுக்கு மகிழ்ச்சி திருநாள். தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று அம்மா எங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். எனவே ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் செய்து வருகிறோம்.

அம்மா தனது ஆட்சி காலத்தில் எப்போதும் மக்கள் நலனை பற்றியே சிந்தித்து வந்தார். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அவரது திட்டங்கள் ஒவ்வொன்றும் புரட்சிக்கரமான திட்டங்கள். உலகமே பாராட்டும் திட்டங்கள். பார்த்து, பார்த்து அவர் திட்டங்களை கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக அவர் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

மக்களை பற்றி சிந்தித்த அம்மா

எம்.ஜி.ஆரும், அம்மாவும் என்றென்றும் நிலைத்து நிற்கும், வரலாற்றில் இடம் பெறும் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தனர். உலகமே பாராட்டும் திட்டங்களை நிறைவேற்றினார்கள். அதுபோன்று திட்டங்களை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்தார்களா? மக்களுக்காக திட்டங்களை எம்.ஜி.ஆரும், அம்மாவும் தீடடினார்கள். ஆனால் கருணாநிதி தனது குடும்பம் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது. மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை

அம்மாவுக்குப் பின் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். மிகவும் எளிமையானவர், எளிதில் எல்லோரும் அணுகக் கூடியவர், ஓரு விவசாயி, சாமானியன். அம்மாவின் வழியில் எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திக்கிறார்.

எப்படியாவது இந்த ஆட்சியை நீக்கிவிட வேண்டும் என்று ஸ்டாலின் என்னெ்னலாமோ செய்து பார்த்தார். இந்த ஆட்சிக்கு எதிராக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தினார். பல்வேறு நெருக்கடி சோதனைகளை கொடுத்தார். இந்த ஆட்சி ஒரு மாதம் தான், 3 மாதம் தான் என்றெல்லாம் ஆரூடம் சொன்னார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அனைத்திலும் தோல்வி தான் அடைந்தார்.

அம்மாவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்படுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக காட்சி அளிக்கிறது. தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. தொழில் அதிபர்கள் தொழில் துவங்க ஆர்வமுடன் வருகிறார்கள். லட்சக்கணக்கான ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் எடப்பாடி பழனிசாமி சாதனைகளை படைத்து வருகிறார்.

தமிழகம் சிறந்த மாநிலம்

இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்று மத்திய அரசு ஆய்வு நடத்தி தெரிவித்திருக்கிறது. விவசாயம், உள்ளாட்சி, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, சமூகநலத்துறை என பல்வேறு துறைகளில் சாதனை படைத்ததற்காக மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளன.

பொங்கலுக்கு அனைவருக்கும் பொங்கல் பொருட்களுடன் 1000 ரூபாய் ரொக்கப் பணமும் கொடுத்தார். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து இன்று தண்ணீர் சேமிக்கப்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் குறை தீர் முகாம் நடத்த ஏற்பாடு செய்து மக்கள் குறைகளை தீர்த்து வைத்திருக்கிறார். உடனுக்குடன் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

16,382 கோப்புகளில் கையெழுத்து

கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்திருக்கி்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்திருக்கிறார். 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறார்.

காவிரி டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாக்க வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டலமாக உருவாக்கி இருக்கிறார். 1000 கோடியில் தலைவாசலில் கால்நடை பூங்கா கொண்டு வந்திருக்கிறார். ரூ.950 கோடியில் குடிமராமத்து திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.

செல்வாக்கு பெருகுகிறது

முதலமைச்சரின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் இன்று இந்த அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை பாராட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி வரும் மக்கள் செல்வாக்கை கண்டு ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை வீழ்த்தி விடலாம். தான் முதலமைச்சராக வந்து விடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவே இல்லை.தி.மு.க. என்றாலே அராஜக கட்சி தான்.

அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த அலுவலகம் வளாகம் 4 ஏக்கரில் உருவாகி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என அனைத்தும் அமைய உள்ளது. இந்த வளாகத்தை முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்.

ரூ.8 கோடியில் திருமண மண்டபம்

அயப்பாக்கத்தில் ரூ.8 கோடி செலவில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டு, அது முடியும் தருவாயில் உள்ளது. 100 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டன. ஸ்கேன் உட்பட அனைத்து வசதிகளும் இங்கு அமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள 5 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் பகுதியில் 15 வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. நில ஆக்கிரமிப்பு

தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். அதனை மீட்டு இன்று 2 பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையிலும், மாலையிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இங்கு நடைபயிற்சி செய்கிறார்கள். மங்கல் ஏரி, எம்.ஜி.ஆர். பூங்கா ஆகிய பூங்காக்களை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினையே வராத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். 2 பெரிய கிணறுகள் மிகவும் சீர்கெட்டு கிடந்தன. அதனை இப்போது தூர்வாரி உள்ளோம். இப்போது அங்கு தண்ணீர் பீறிட்டு வருகிறது. 30 அடி ஆழத்துக்கு அங்கு தண்ணீர் இருக்கிறது. நெற்குன்றத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது.

மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி வருகிறோம். எனவே மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்வளவு செய்கிறார்களே என்று தி.மு.க.வுக்கு வயிற்று எரிச்சல். எனவே தான் எப்படியாவது இந்த ஆட்சி மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். குட்டிகர்ணம் போடுகிறார். ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை.

மக்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் அரசு அம்மாவின் அரசு. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா தி.மு.க.வின் இரட்டை இலைகள், இரண்டு கண்களாக விளங்கி வருகிறார்கள். இருவரும் அம்மாவிடம் பாடம் பயின்றவர்கள். எனவே அம்மாவின் வழியில் இன்று பீடுநடை போட்டு மக்கள் பாராட்டும் வண்ணம் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு 16 வகை பொருட்களுடன் பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஏழைப்பெண்கள் திருமணத்துக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய், தாலிக்கு தங்கம் 8 கிராம், ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம் மானியம் என ஏராளமான மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களைப் பற்றி சிந்திக்கும் அரசு இது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அம்மா 16 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டாக ஆட்சி செய்து வருகிறார். 30 ஆண்டு ஆட்சி செய்த ஒரே இயக்கம் அண்ணா தி.மு.க. தான். இந்த இயக்கத்தை யாரும் வெல்ல முடியாது. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்தனர். அந்த பகுதி முழுவதும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் எம்.பி. முத்துமணி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அவைத் தலைவர் கா.சு. ஜனார்த்தனம், ராஜேஸ்வரி, புலவர் ரோஜா, தென்றல் குமார் உட்பட பலர் பேசினார்கள்.

147வது வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஏ.தேவதாஸ் நன்றி கூறினார்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பா.பென்ஜமின் மிக சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *