செய்திகள்

“மக்கள் குரல்-’’ ஆசிரியர் எம்.எஸ். 98வது பிறந்த நாள்; கண் மருத்துவ முகாம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 4

“மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர்”- பத்திரிகைகளில் நிறுவன ஆசிரியர் எம் சண்முகவேலின் (எம்.எஸ்) 98 ஆவது பிறந்தநாள் விழா, மக்கள் குரல் அலுவலகத்தில் இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர். முத்துக்குமார், செயல் இயக்குனர் பி. ஜீவானந்தம், ஆசிரியர் குழு, நிர்வாகம் -அச்சுப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் ஆசிரியரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஆசிரியர் ஆர். முத்துக்குமாரின் தாயாரும், நிறுவன ஆசிரியரின் சகோதரியின் மகளும், மக்கள் குரலின் சிறுகதை ஆசிரியரும், தொழிலதிபருமான வசந்தா ராஜமாணிக்கம், எம்.எஸ்.இன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் ஊழியர்களிடம் ‘பாச’ உரையாற்றினார்.

“வாசமும் பத்திரிக்கை, சுவாசமும் பத்திரிக்கை” என கடைசி மூச்சிருக்கும் வரை பத்திரிக்கை துறையில் 70 ஆண்டு காலம் அரும்பணியாற்றி, என்றும் நினைவில் வாழும்’’ எம்.எஸ்–ன் சிறப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

‘‘செய்யும் தொழிலே தெய்வம். அதில் மக்கள் குரல் ஒரு கோவில். ஆசிரியர் குழு கர்ப்பக்கிரக கடவுள், மூலவர். வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் நிருபர்கள் உற்சவ மூர்த்திகள். நிர்வாகம் – கோவிலின் பிரகாரம் மாதிரி. அந்தக் கோவிலைத் தாங்கிப் பிடித்து நிற்கும் வலுவான தூண்கள். அச்சடிக்கும் எந்திர ஊழியர்கள் கடவுளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள். பத்திரிகையின் வாசகர்கள் – பக்த கோடிகள் – வரவேற்பு அறையில் இருக்கும் செக்யூரிட்டி பணியாளர்கள் கோவிலுக்குள் வரும் பக்தர்களை வரவேற்கும் துவார பாலகர்கள்’’ என்று பத்திரிகையையும், கோவிலையும் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை கொடுத்தார்.

ஆசிரியரின் எண்ணப்படி ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு நிறுவனத்தை இன்னும் இன்னும் உயர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியரின் செயல்பாட்டையும், கடைசி மூச்சிருக்கும் வரை எப்படி செயல்பட்டார் என்பதையும் ஆர். முத்துக்குமார் ரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டார்.

ஜீவானந்தம் அறிமுக உரையாற்றினார். முடிவில் ராம்ஜீ நன்றி கூறினார்.

மக்கள் குரலின் வளர்ச்சிக்கு – விளம்பரப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு கடைசி மூச்சிருக்கும் வரை ‘‘மக்கள் குரல்’’ மோகன் என்று சொல்லும் விதத்தில் நல்ல பெயரோடு மறைந்திருக்கும் ஏ.பி.மோகனுக்கு 2 நிமிடம் ஊழியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல இளம் வயதிலேயே அலுவலகத்தில் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகளைக் கடந்து கடைசி மூச்சு இருக்கும் வரை சர்குலேஷன் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய உமா பார்வதியின் மறைவுக்கும் ஊழியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அமெரிக்காவிலிருந்து ஏ.கே.சித்தரஞ்சன் (இயக்குனர்) வாழ்த்துக்களைப் பகிர்ந்தார்.

மருத்துவ முகாம்

‘‘மக்கள் குரல்’’ நிறுவன ஆசிரியர் எம். சண்முக வேல் (எம்.எஸ்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 2008ம் ஆண்டு தொடங்கி மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘‘மக்கள் குரல்’’ பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் அனுபவம் வாய்ந்த ‘சைட் கேர் பவுண்டேஷன்’ டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *