சென்னை, ஜூலை.30-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக தமிழகத்தின் மாவட்டம், தாலுகா, காவல் நிலைய நிர்வாக எல்லை விரிவாக்க நடவடிக்கைகள் வரும் டிசம்பர் வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட பொதுத்துறை செயலாளர் நந்தகுமாரின் அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசு தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணியின்போது சம்பந்தப்பட்ட வட்டம், மாவட்டத்தின் எல்லையில் எவ்வித மாற்றமும் செய்யப்படக் கூடாது.
2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் மார்ச் 31ந் தேதிவரை, நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், நகரங்கள், வட்டங்கள், காவல் நிலையங்கள், உள்சரகங்கள், மாவட்டங்கள் ஆகிய நிர்வாக அலகுகளுக்கான எல்லைகளை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும், புதிய அலகுகள் உருவாக்கத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் இந்த நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கத்தை கடந்த ஜூன் 30ந் தேதி வரை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரக கூடுதல் பதிவாளர் ஜெனரல் கடந்த ஜூன் 30ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதில், நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் உத்தரவு வரும் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், புதிய அலகுகள் உருவாக்கத்துக்கான தடையும் நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், நகரங்கள், வட்டங்கள், காவல் நிலையங்கள், உள்சரகங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கம் வரும் டிசம்பர் 31ந் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. அதுபோல் புதிய நிர்வாக அலகுகள் உருவாக்கம், 2024ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் முடியும்வரை தடை செய்யப்படுகிறது.
எல்லை மாற்றம் தொடர்பான கருத்துருக்கள் நிலுவையில் இருந்தால் வரும் டிசம்பர் 31ந் தேதிக்குள் தமிழக கணக்கெடுப்பு பணிகளுக்கான இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.