செய்திகள்

‘மக்கள்குரல் – 50’


எங்களது பத்திரிகை உலக பயணத்தில் இன்றைய தினம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள்!

2022 செப்டம்பர் 3ந் தேதி ‘மக்கள்குரல்’ நாளேடு வெற்றிகரமாக 50வது ஆண்டில் (பொன்விழா) அடிஎடுத்து வைக்கிறது.

மகிழ்ச்சி ஒரு பக்கம், பெருமிதம் ஒரு பக்கம். இரண்டுக்கும் நடுவில் வாசகர்கள் – விளம்பரதாரர்கள் – பத்திரிகை ஏஜென்சிகள் மூவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில் இருக்கும் சிறப்பு ‘அக்கன்னா’ ஆயுத எழுத்தைப் போல (ஃ)

எங்களைத் தாங்கிப் பிடித்து, தூக்கி நிறுத்தி இருக்கும் மூவருக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

உழைக்கும் பத்திரிகையாளர்களால் உழைக்கும் வர்க்கத்தினரை மையப்படுத்தி அவர்களின் மேம்பாட்டுக்காகத் துவக்கப்பட்டது ‘மக்கள்குரல்’. நாளேட்டின் நிறுவனர் எங்கள் நினைவில் என்றும் வாழும் எம்.சண்முகவேல் (எம்எஸ்) ஆசிரியர் பொறுப்பேற்று அவரது ராசிக் கரங்களால் முதல் இதழ் வெளி வந்த நாள் 1973, செப்டம்பர் 3.

எத்தனையோ சோதனைகளையும் – சாவல்களையும் – இன்னல்களையும் – இடையூறுகளையும் சந்தித்து, இன்றைக்கு சாதனை படைத்து,

மாலை நேர தமிழ் தினசரிகளில் தனக்கும் ஓர் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது ‘மக்கள்குரல்’ என்பதை மறக்க முடியாது.

பணம் படைத்த பெரும் முதலாளிகள் வர்க்கந்தான் பத்திரிகைகளை நடத்தி – வெற்றி உலா வர முடியும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்…

உழைக்கும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்தால், நினைத்ததை வெற்றிகரமாக சாதித்துக் காட்டிட முடியும் என்று செயலில் நிரூபித்தவர் எம்எஸ்!

‘Wedded to Journalism’

வாசகம், அது நூற்றுக்கு நூறு பொருந்தி வரக்கூடியது – எம்எஸ் அவர்களுக்கே.

திருமணம் செய்து கொள்ளாமலே செய்தி – செய்தி – முழு நேரமும் பத்திரிகை … என்று அதன் சிந்தனையில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, 50 ஆண்டுகள் ‘மக்கள்குரல்’ கூட்டுக்கு குடும்பத்தை தலை நிமிரச் செய்தவர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ராசிக்கரத்தால் துவக்கம், அவர் வழி நடந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அரவணைப்பால் முன்னேற்றம் கண்டு… இன்றும் வெற்றி நடை போட்டு பயணத்தைத் தொடர்கிறது, ‘மக்கள்குரல்’!

ஆண்டுக்கு ஒரு புதுமை என்ற இலக்கோடு அவ்வழிகாட்டுதலில் ‘மக்கள்குரல்’ படிப்படியாக வளர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து வெளி வருகிறது. இதன் குரூப் ஆங்கில பத்திரிகையாக ‘டிரினிட்டி மிரர்’ உள்ளது.

தற்போதைய புலனாய்வு பத்திரிககைள் 1970–80 காலக்கட்டங்களில் அவ்வளவாக இல்லாத போது பல்வேறு புலனாய்வு தொடர் கட்டுரைகளை வெளியிட்டு தனி வரவேற்பைப் பெற்றது.

அரசியல், நாடும் நடப்பும், விமர்சனக் கட்டுரைகளில் இரட்டையர்கள் என்று எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டு வந்திருக்கும் டிஆர்ஆர் – எம்எஸ் இருவரின் தினசரி கருத்துக் கட்டுரை இன்றும் (ஆசிரியர் எம். முத்துக்குமார்) தொடர்ந்து எழுதப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது.

அனைத்து பத்திரிகைகளும் அச்சு எழுத்துக்களை கோர்த்து அச்சிடும் நிலையில் இருந்தபோதும்… முன்னணி ஆங்கில தமிழ் பத்திரிகைகள் பத்திரிகைகளும் அச்சு எழுத்துக்களை கோர்த்து அச்சிடும் நிலையில் இருந்தபோதும்…

தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக கம்ப்யூட்டர் முறையில் DTP வசதியை ‘மக்கள்குரல்’ அறிமுகப்படுத்தியது. இதர நிறுவனங்கள் ‘மக்கள்குரல்’ அலுவலகம் வந்து நேரில் பார்வையிட்டு அதன் பிறகு அவர்களும் அமல்படுத்திய வரலாறும் உண்டு.

டைப்ரைட்டிங் வல்லுநர்களை இப்புதிய முறைக்கு நியமிக்காமல் கையால் அச்சு கோர்த்துக் கொண்டிருந்தவர்களை கீபோர்டில் அடிக்கப் பழகி வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியர் எம்எஸ் ஆவார்.

தமிழ் பத்திரிகையில் வித்தியாசமாக ஆங்கில நாளிதழுக்கு இணையாக பிரபல நிறுவனங்களின் வர்த்தக வணிக செய்திகள் வெளியிட்டு அந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் பெற வைத்த சாமர்த்தியசாலி ஆவார்.

2007ல் மறைந்து விட்ட எம்எஸ் அவர்கள் காட்டிய வழியில் அவரின் அடிச்சுவட்டில் ஆர்.முத்துக்குமார் ஆசிரியர் பொறுப்பேற்க எம்எஸ் கண்ட திறமை மிகு ஆசிரியர் குழு, மார்க்கெட்டிங் பிரிவு, விநியோக பிரிவு, அச்சுப் பணியை சிறப்புற செய்திடும் பிரிண்டிங் பிரிவு, நேரம் தவறாமல் உங்களிடம் சென்றடைய வைக்கும் வாகன ஓட்டிகள் படை புதிய எழுச்சியுடன் இத்துறையில் மேலும் சிறப்புடன், எல்லா தரப்பு செய்திகளையும் ஏந்தி அதிவேகத்தில் உங்களிடம் வந்து சேர எழுச்சியான சுறுசுறுப்புடன் செயல்பட உறுதி ஏற்கிறோம்.


Leave a Reply

Your email address will not be published.