திட்டக்குழு ஆய்வில் தகவல்
சென்னை, ஜூலை 16–-
‘மக்களைத் தேடி மருத்துவ திட்டம்’ மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த 83 சதவீத குடும்பங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது என்று மாநில திட்டக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொற்றா நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 2021–-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 70 சதவீத இறப்புகளுக்கு தொற்று அல்லாத நோய்கள் காரணமாக இருக்கின்றன. மாநிலத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் உயர் ரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பாதிப்புக்குள்ளான மக்களை காப்பாற்றும் வகையில்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் சிறப்பு, தொற்று அல்லாத நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் சுகாதார சேவைகளை பொதுமக்களின் வீடுகளிலேயே வழங்குவதுதான்.
சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்த பரிசோதனை, நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மேலாண்மை, மார்பகம், வாய் மற்றும் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளை உள்ளடக்கிய திட்டம் இது. தொற்றாத நோய்களுக்கான மருந்துகள், பிசியோதெரபி, நோய்த்தடுப்பு சிகிச்சை போன்ற சேவைகள் இந்த திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு நாளோடு சிகிச்சைகளை முடித்துக்கொள்ளாமல் அந்த மருத்துவ சேவையை நோயாளிகள் தொடர்ந்து பெற முடியும்.
ஏழை மக்கள்
சர்க்கரைநோய் மற்றும் உயர்ரத்த அழுத்தத்துக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3–-ல் 2 பேர் பொது மருத்துவ நிறுவனங்களில் பரிசோதனை மேற்கொள்கின்றனர். தற்போது இந்த சோதனைகளில் 50 சதவீதம் வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் வெற்றிக்கு சான்றாகும்.
ஏழைகள், விளிம்புநிலை சாதியினர், முதியவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது சோதனைகள் மற்றும் நோய் கண்டறிதலுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.
இந்த திட்டம் வருவதற்கு முன்பு, குறைந்த வருமானம் கொண்ட மக்களில் 33 சதவீதத்தினர் மட்டுமே சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்காக பரிசோதனை செய்துகொண்டனர். தற்போது இந்த சதவீதம் 50 சதவீதமாக உயர்ந்திருப்பது, திட்டத்தின் சிறப்பை வெளிக்காட்டுகிறது. குறைந்த விலையில் மருத்துவ வசதி போதுமான அளவில் கிடைப்பதில்லை.
எனவே பல ஏழை மக்கள், மோசமான சுகாதார விளைவுகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, அதிக செலவாகும் சிகிச்சை தேவைப்படும் தொற்று அல்லாத நோய்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் வரப்பிரசாதமாகும். மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ், 44 சதவீத விளிம்புநிலை சாதியினர், சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தத்துக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இது இந்த திட்டம் வருவதற்கு முன்பு 38 சதவீதமாக இருந்தது.
மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவ தேவைகள் முதியோருக்கு அதிகம் உள்ளது. முதியோர்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதில் இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வருவதற்கு முன்பு, 60 வயதுக்கு அதிகமானவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தத்துக்காக பரிசோதனை செய்துகொண்டனர். இது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வந்த பிறகு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் முன்பு சுகாதார வசதிகள் குறைவாக இருந்த நிலையில் இந்த திட்டம் பல்வேறு சேவைகளை வழங்கி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு பிறகு சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்த பரிசோதனைகள் 20 சதவீதம் புள்ளிகளாக அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில் இதன் விளைவு மிகக் குறைவுதான். நகர்ப்புற குடும்பங்களில் 57 சதவீதம் மட்டுமே ஒரு பெண் சுகாதார தன்னார்வலரால் பார்வையிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் 83 சதவீத குடும்பங்கள் பார்வையிடப்பட்டு இருக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் புற்றுநோயையும் பரிசோதிக்க முடியும். அதன்கீழ் 3 வித புற்றுநோய்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கான விழிப்புணர்வு தேவை.
இந்த தகவல்களை தமிழ்நாடு மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது.