செய்திகள்

மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம்: முதலமைச்சர் எடப்பாடி பேட்டி

சென்னை, ஜூன்.19-

பருவமழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீரும் கீழே சென்றுவிட்டது என்ற போதிலும் மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, மெரினா கடற்கரையில், அம்மாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இந்த நினைவிடத்திற்கு வரவில்லையே…

பதில்: இது தவறான செய்தி. ஏற்கனவே அம்மா நினைவிடத்திலே அவரவர்கள் வந்து நினைவஞ்சலி செலுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.

கேள்வி: தமிழக எம்.பி.க்கள் தமிழுக்கு துரோகம் இழைக்கிறார்கள்..

பதில்: அது அவர்களுடைய பாணி, நாங்கள் உண்மையை பேசுகிறோம். ஆனால், தி.மு.க.வில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி படித்திருக்கிறார்கள், யார் படித்திருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தயாநிதி மாறன் இந்தி படித்திருக்கிறார், ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்கிறார். நாங்கள் அப்படி பொய் சொல்லவில்லை. அண்ணா தி.மு.க.வும், நிர்வாகிகளும், தொண்டர்களும் உணர்வு பூர்வமாக, மனப்பூர்வமாக தமிழை மதிக்கக்கூடியவர்கள். ஆகவே, எங்கள் உள்ளத்திலே தமிழ் இருக்கின்றது. உங்களைப் போல் இருக்கின்ற நிருபர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என்ன உணர்வு இருக்கின்றதோ, அதே உணர்வு எங்களுக்கும் இருக்கின்றது.

நிலத்தடி நீர் குறைந்து விட்டது

கேள்வி: தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, அதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்?

பதில்: நேற்றைய தினம் உள்ளாட்சித் துறை அமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்டான வழிகளை ஆலோசித்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்கு தெரியும். கடுமையான வறட்சி மற்றும் நமக்கு கிடைக்க வேண்டிய பருவ மழை போதிய அளவு பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம், குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலமாக மக்களுக்குத் தேவையான குடிநீர் அம்மாவின் அரசால் லாரிகள் மூலமாக தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர் குறைந்துவிட்ட காரணத்தினால், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நீரையே, குடிப்பதற்கும், துவைப்பதற்கும் மற்றும் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள். அதனால் தான் இந்த குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான் பருவ மழை துவங்குவதால், அதுவரை இருக்கின்ற தண்ணீரை வைத்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கேற்றாற்போல், இன்றைக்கு நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் போதிய அளவிற்கு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தருணத்தில், பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்று சொன்னால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துத் தான் மக்களுக்கு குடிநீராக வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். ஆகவே, இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் அரசுக்குத் துணை நிற்க வேண்டும். ஏதோவொரு இடத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை பெரிதுபடுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

வீராணம் மூலம் தண்ணீர்

எந்த அளவிற்கு தமிழகத்தில் மழை பொய்த்திருக்கிறதென்று உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். இயற்கை பொய்த்துப்போய் விட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் எல்லாம் வறண்டு போய் விட்டன. நமக்குக் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீரில் 2 டிஎம்சி தான் கொடுத்தார்கள். கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும். இதுவரை 4 டிஎம்சி தண்ணீர் தான் அங்குள்ளது. எனவே, அங்கிருந்தும் மக்களுக்கு தண்ணீர் தரமுடியாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலமாக தண்ணீரை போதிய அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும், குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் அதனை தீர்த்து வைப்பதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கி, முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *