காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை
சென்னை, மார்ச் 07–
தி.மு.கவை விட அ.தி.மு.க அதிக இடங்கள் கொடுத்தாலும், அவர்களுடன் கூட்டணி வைத்துகொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது:–
தமிழ்நாட்டில் பா.ஜ.க நோட்டா வாக்குகளை விட குறைவாக வாக்குகளையே பெரும். தமிழ்நாடு மக்களின் மனசாட்சியாக இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். அவர் காங்கிரஸின் மனசாட்சியாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் செயல்படுவார். ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட மாட்டார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
போதைப்பொருளுக்கு காரணம் யார்?
போதைப் பொருள் வருவதற்கு காரணமே ஒன்றிய அரசுதான். முத்ரா துறைமுகம், காண்வா துறைமுகம் என்று இந்த இரு துறைமுகமும், குஜராத்தில் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு யார் போதை பொருளை இறக்குகிறார்கள் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பா.ஜ.க ஆட்சியில் எவ்வளவு போதை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது. எந்த துறைமுகத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.
இது தேசத்திற்கான தேர்தல். இந்த நாட்டை பாதுகாப்பதற்கான தேர்தல். பாசிச சக்திகளை அகற்றுவதற்கான தேர்தல். எனவே, 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தி.மு.கவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். தி.மு.க-வை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அ.தி.மு.க-வுடன் ஒருபோதும் கூட்டணி சேரமாட்டோம்.
தென் மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட போது ரூ. 37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில், பிரதமர் ஒரு பைசா கூடநிதி ஒதுக்கவில்லை. அவர் எந்த முகத்துடன் தேர்தலில் மக்களை சந்திப்பார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டியுள்ள பிரதமர் மோடி, மக்கள் பிரதிநிதிகளை அழைத்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் யாரையும் அழைக்கவில்லை. ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது’ என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.