நாடும் நடப்பும்

மக்களின் ஆதரவு யாருக்கு? வாக்கு எண்ணிக்கை மே 2

5 மாநிலங்களில் சிக்கல்இல்லா சிறப்பான வாக்குப் பதிவு

சபாஷ்! தேர்தல் ஆணையம்

ஒரு வழியாக 8 வது இறுதி கட்ட வாக்களிப்பு மேற்கு வங்கத்தில் முடிந்து விட்டது. ஆக கடந்த 2 மாதங்களாக 5 மாநிலங்களில் நடந்த பரபரப்பு தேர்தல் பணிகள் நேற்றோடு நிறைவு பெற்றது.

அடுத்தது நாட்டின் பார்வை எந்த மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகிவிட்டனர். நாளை மறுநாள் வெளிவர இருக்கும் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வரும் தேர்தல் முடிவு கணிப்புகள், கருத்து கணிப்புகள் எல்லாம் சரியா? என்பதும் தெரிய வரும்.

தற்போது நாடே கொரோனா பெரும் தொற்றின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வாக்குகள் எண்ணிக்கைகள் மிக தீவிர கண்காணிப்புகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் டி–20 கிரிக்கெட்டின் வெற்றியின் பின்னணியில் பரபரப்பான முடிவுகள் முக்கிய காரணமாகும்! இறுதி பந்து வரை கூட ஆட்ட முடிவை கணித்துவிட முடியாத நிலையில் தான் பல ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளதை அறிவோம்.

அதே பரபரப்புடன் அசாம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் தேர்தல் மிக அமைதியான முறையில், நேர்த்தியாகவே நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக கோவிட்–19 தொற்றின் பின்னணியில் நடைபெற்ற தேர்தல் என்பதால் சமுதாய விலகல், சானிடைசர் மற்றும் முகக்கவசத்துடன் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தொட்டு தானே அதாவது பட்டனை அழுத்தித்தான் வாக்களிக்க முடியும். ஆகவே எல்லா வாக்காளர்களுக்கும் இலவசமாக கையுறை தந்து அதை கையில் மை வைத்து விட்ட பிறகு அணிந்து வாக்கு பெட்டி அருகே செல்ல அனுமதிக்கப் பட்டனர்.

இப்படி கையுறையுடன் வாக்களித்ததால் தொற்று பரவலுக்கு வழியின்றி செய்து விட்டது தேர்தல் ஆணையம், அதற்காக அவர்களது முடிவையும். அதை உரிய வகையில் அமுல் படுத்தியதற்கும் நாடே பாராட்டுகிறது.

1989 ல் பரிசோதிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு முறை 1999 ல் தான் கோவா சட்டசபை தேர்தலில் முழுமையாக உபயோகிக்கப்பட்டது. அதன் பிறகு 2000 ம் ஆண்டு முதலே மின்னணு வாக்கு முறையே நடைமுறையில் இருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு வந்த பிறகு வாக்களிப்புக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதேயில்லை என்ற நிலை வந்து விட்டது. அதனால் முதியவர்கள், பெண்கள் எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வர ஆரம்பித்தும் விட்டனர்.

முதல் முறையாக மிகப்பெரிய மாற்றம் வாக்குச் சீட்டில் வந்தது, அது தான் யாரையும் தேர்வு செய்யவில்லை என்ற ‘NOTA’ என்ற வசதி.

வேட்பாளரை பிடிக்காததால் வாக்களிக்க வராமல் இருப்பது அல்லது வாக்கை செல்லாததாக்க 2 பேருக்கு வாக்களிப்பது என்பன மாற இப்புதிய முறை வந்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு முறை முழுமையாக நமபப்படுகிறதா? ஒவ்வொரு முறையும் தோற்கும் கட்சியும் பிற தலைவர்களும் வாக்கு இயந்திர மென்பொருள் தவறு செய்ய வைத்து விட்டனர். அதனால் தங்களுக்கு போடப்பட்ட வாக்குகள் எல்லாம் கூட அடுத்த கட்சிக்கு சென்றுவிட்டது என குற்றம் சாட்டுவார்கள்.

இது ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என்று எட்டாத திராட்சையை விமர்சிக்கும் புனையை போன்ற விமர்சனமாகும்! அதே கட்சி பின்னாளில் வெற்றி பெற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவை தவறு என்று குற்றம் சாட்டிய வரலாறு கிடையாது!

ஆக தேர்தல் நடத்தப்படும் முறையையோ, தேர்தல் ஆணையத்தையோ குற்றம் சாட்டாமல் தோல்வியை மக்கள் வழங்கிய தீர்ப்பாக ஏற்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவரின் மரபாக இருக்க வேண்டும்.

கட்சிகளுக்கு நன்கொடை நிதி

மேலும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்காக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.695 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடன் பத்திரம் மூலம் ரூ.659.34 கோடி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தெரிய வந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு (என்ஜிஓ) தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ந் தேதி முதல் 10 ந் தேதி வரையிலான காலத்தில் எஸ்பிஐ தனது 16 வது தவணை தேர்தல் பத்திரத்தை வெளியிட்டது.

இதில் ஒவ்வொன்றும் ரூ.1 கோடி முக மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.671 கோடி வசூலானதாகவும் ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.23.70 கோடி வசூலானதாகவும் ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.64 லட்சம் வசூலானதாகவும் கமடோர் லோகேஷ் கே பாத்ரா (ஓய்வு) என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு எஸ்பிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது?

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கி அதைச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம்.

இப்படி இந்திய தேர்தல் களத்தில் பல்வேறு புதுமைகளும் அரங்கேறி வருவதை பார்க்கும்போது ஆன்லைன் வாக்களிப்பு முறையும் விரைவில் வரக் களம் தயாராக இருப்பதை உணர முடிகிறது.

வீட்டிலிருந்தே பணி செய்வது, படிப்பது என நிலைமை வர கொரோனா பெரும் தொற்று ஓர் முக்கிய காரணமாகும்.

வயதானவர்களுக்கு தபால் ஓட்டு

அந்த வரிசையில் புது முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுக்க வைத்தது கொரோனா தொற்று, அதன் பயனாக 70 வயதுக்கு மேற்பட்டோர் பலர் வீட்டிலிருந்தபடி தபால் ஓட்டுகள் போட்டனர். இனி வரும் காலத்தில் விரைவில் ஸ்மார்ட் போனிலேயே வாக்களிக்கும் நாள் வரத்தான் போகிறது.

நாளை மறுநாள் மின்னணு வாக்குகள் எண்ணப்படுவதும் அதிவேகமாகவே இருக்கும், அதே வேகத்தில் 4 மணி நேரத்தில் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சி எது என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும்.

வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யாராக இருந்தாலும், வாக்களித்த வாக்காளர்களே ஜனநாயகத்தில் முதன்மையானவர், அவர் நலன் காக்கவே ஆட்சியில் அமர்த்தப்பட்டு இருக்கிறோம் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டு ஜனநாயகத்தின் குணம் மணம் குளிர ஆட்சி செய்ய பொறுப்பேற்று பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *