செய்திகள்

மக்களிடம் வெறுப்பை விதைக்காமல் அன்பை விதைக்கும் அரசியலே தேவை

Makkal Kural Official

பிரியங்காவை புகழ்ந்து ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம், நவ. 04–

எனது தந்தை கொலையில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவரையே கட்டி அணைத்து, அவரை பற்றி கவலைப்பட்ட அன்புள்ளம் கொண்டவர் பிரியங்கா காந்தி என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு, 13 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், பா.ஜ.க வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரியும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வயநாட்டில் நடந்து வருகிறது.

பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:–

தற்போதைய உலகில் மனிதமும், அன்பும் தேவைப்படுகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறை, வெறுப்புதான் இருக்கிறது. எங்கும் மனிதநேயத்தைப் பார்க்க முடிவதில்லை. என் தந்தையின் மரணத்தில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. அவரை என் சகோதரி பிரியாங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரைக் கட்டி அரவணைத்து ஆறுதல் கூறினார்.

நளினியை நினைத்து கவலை

நளினியை சந்தித்துவிட்டு வந்து என்னிடம் பேசிய பிரியாங்கா காந்தி, ‘நளினியைப் பார்த்ததற்குப் பிறகு, அவரைப்பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது’ எனக் கூறினார். யாரைப் பற்றி பேசுகிறார்… என் தந்தையின் கொலையில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணைப் பார்த்து என் சகோதரி கவலைப்படுகிறார். அப்படித்தான் அவர் வளர்க்கப்பட்டிருக்கிறார். பிரியங்காவை சகோதரியாகப் பெற்றது என் அதிர்ஷ்டம்.

இதுபோன்ற அன்பை விதைக்கிற அரசியல்தான் தற்போதைய இந்தியாவுக்குத் தேவை. வெறுப்பையும், வன்முறையையும் விதைக்கும் அரசியலல்ல. அன்பையும், மனிதத்தையும், மனிதர்கள் மீது காதலையும் உருவாக்கும் அரசியலைதான் நாம் முன்னெடுக்க வேண்டும்” என ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *