செய்திகள்

மக்களவை தேர்தல்: வாக்களிக்க தகுதியானவர்கள் 96 கோடி பேர்

டெல்லி, ஜன. 27–

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் தகுதியான வாக்களிக்காளர்கள் 96 கோடி பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

96 கோடி வாக்காளர்கள்

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மக்களவைத் தேர்தலில் 47 கோடி பெண்கள் உட்பட 96 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 1.73 கோடி பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் நாடாளுமன்ற தேர்தலை சுமூகமாக நடத்த, 1.5 கோடி வாக்குச்சாவடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 2023ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய கடிதத்தின்படி, இந்தியாவில் 1951-இல் 17.32 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். முதல் மக்களவைத் தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவானது என்றும் அதேவேளை, 1957-இல் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 19.37 கோடியாக உயர்ந்தது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 91.90 கோடியாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் எனவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *