செய்திகள்

மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும்: சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி கோரிக்கை

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூன் 27–

மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கடந்தாண்டு மே 28ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அன்றைய தினம் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.

அப்போது, ”நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது; செங்கோல் என்பது ஒரு அதிகார மாற்றத்தின் அடையாளம்” என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

தற்போது பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில் 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:– சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவரது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ள காங்கிரஸ், செங்கோலை அகற்றுவது தொடர்பான சவுத்ரியின் கருத்தை ஆதரித்துள்ளது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், “இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும், தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா?. தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சி அதனை எதிர்க்கிறது. அவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.இந்த நிலையில் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. சவுத்ரி விடுத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பாஜக எம்.பி.க்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *