சிறுகதை

மகிழ்வின் எல்லை | மு.வெ.சம்பத்

Spread the love

மகாவீர் சிறு வயது முதலே தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறியாய் இருப்பவன்.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பொழுது பல நண்பர்கள் இருந்தாலும் தனது விருப்பத்திற்கு இசைந்து வரும் நண்பர்கள் உடன் நெருக்கம் வைத்துக் கொண்டான்.

படிப்பிற்குப் பின் தன்னை தன் தந்தை செய்யும் வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தினான். அதோடு மட்டுமல்லாமல், நல்ல லாபம் ஈட்டினான்.

கூடவே பணத்தை பாதுகாப்பதிலும் குறியாக இருந்தான்.

அவனது சொந்த ஊரிலேயே நன்கு படித்தவள் மாயாதேவி. அவளை மகாவீருக்கு கரம் பிடித்துக் கொடுத்தனர் எல்லோரும் பாராட்டும் வண்ணம்.

இருவரும் பொருத்தமான ஜோடி என வந்தவர்கள் பாராட்டியதைக் கண்டு மகாவீர் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

மகாவீர் தந்தை அவனை புதிதாக கட்டிய வீட்டிற்குச் செல் என்ற கூறினார். அப்பொழுது மகாவீர் தயங்கினான். பின் சம்மதித்தான்.

நல்ல நாள் பார்த்து மனைவியுடன் குடி புகுந்தான்.

புது வீட்டிற்கு வந்த நாள் முதல் மகாவீர் மிகவும் பரபரப்பானான்.

வியாபார அலுவல் மற்றும் வீட்டு வேலை அவனை வேறொன்றும் சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது.

மகாவீர் குடும்பம், மாயாதேவி குடும்பம் வரும் நாட்களில் வீடு கலகலப்பாக இருக்கும். அவர்கள் சென்றதும் வீடு கலையிழந்து விடுவது போன்று இருவருக்கும் தோன்றும்.

மகாவீர் சில நாட்களாக மாயாதேவியிடம் ஏற்படும் சலிப்பு, வெறுப்பு, அமைதியின்மை இவைகளைக் கண்டு சோர்வடைந்தான்.

யாரிடமும் கூறாமல், அவளை மாற்ற அவன் எடுத்த முயற்சிகள் யாவும் வீணானது.

மாயாதேவியும் திடீரென கோபித்துக் கொண்டு தன் அப்பா வீட்டிற்கு சென்று விட்டாள்.

மகாவீர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். தான் படித்த புத்தகங்களில் மூலம் அறிந்த ஒரு செயலைச் செய்ய எத்தணித்தான். படுக்கையறையில் அழகான படங்கள், வேலைப்பாடுடைய திரைகள், நல்ல ஆளுயரக் கண்ணாடி, கண்ணைக் கவரும் வண்ணம் மேஜையில் பொருட்கள் என அந்த அறையில் நிரப்பி அந்த அறையை இந்திரலோகமாகவே மாற்றியமைத்தான்.

பின் தனது மாமனார் வீட்டிற்கு சென்று அவர் மனைவி மாயாதேவியுடன் கலந்து பேசி அவர்களை சமாதானப் படுத்தி மாயாதேவியை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

வீட்டிற்கு வந்த மாயாதேவி ஏதும் பேசாமல் படுக்கையறைக்குள் சென்றாள். வெகு நேரமாகியும் அவள் அங்கேயே ஐக்கியமானது கண்டு மகாவீர் மனதில் கலக்கம் ஏற்பட்டது.

அவன் மிகுந்த பயத்துடன் கதவைத் திறந்து நுழைந்ததும் தான் காண்பது கனவா, நினைவா என விக்கித்து நின்றான்.

மாயாதேவி தன்னை மிகவும் நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டாள். ஆளுயரக் கண்ணாடி முன்பு நின்று தனது அழகுக்கு மெருகேற்றினாள். அதுமட்டுமின்றி அங்கு இருந்த அழகுப் பொருட்களை எடுத்து தன் மேனியில் பூசி தன்னை வியந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்ததை கண்டான்.

சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாறி நின்றான்.

மாயாதேவி மகிழ்வின் எல்லையில் இமை அசைத்தாள். மகாவீரை அருகில் அழைத்தாள்.

இந்த நேர்த்தியான ஏற்பாட்டைச் செய்ததற்கு நன்றி. இனிமேல் நான் எங்கும் செல்ல மாட்டேன். இந்த அலங்காரங்கள் என்மீது இருப்பது பொய் . என்னோடு நீங்கள் சேர்ந்து இருப்பதே மெய்..எனக் கூறி கணவன் மார்பில் ஆசையாக முகம் புதைத்தாள்.

அவளை மகாவீர் இறுக்கமாக அணைத்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *