சிறுகதை

மகிழ்ச்சியான தருணம் | வி.சம்பத்

கொரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது.

1500 வீடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தடுப்பு விதி முறைகளை மக்கள் கடைபிடிக்கின்றார்களா என்று கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் காவல் அதிகாரி மோகன். அவருடன் கூட ஐந்து பேர்களையும் உதவிக்கு நியமித்திருந்தனர்.

மோகன் தனது சக ஊழியர்களுடன் அந்த ஏரியாவிற்குச் சென்றார்.

மக்கள் ஊரடங்கை பற்றி நினைவில் கொள்ளாமல் சாதாரண நாட்களை கழிப்பது போன்று அங்கும் இங்கும் இஷ்டத்திற்கு ஆடிக் கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்.

மோகன் சற்று அந்த ஏரியாவில் உள்ளே சென்றதும் எல்லாக் கடைகளும் திறந்தி ருந்தது. வியாபாரம் வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது.

மோகனை உடுப்பில் கண்ட சிலர் வணக்கம் சார் என்றனர். சிலர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர். ஆனால் கூட்டம் அங்குமிங்கும் இருந்து கொண்டது மட்டுமல்லாமல் சிலர் பாடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் சில முதியோர் ஆதரவின்றி ஆங்காங்கே அமர்ந்து கொண்டருந்ததை கண்டார் மோகன். இப்போது ஏதாவது பேசினால் நிறைய எதிர்ப்புக் கிளம்பும் என்று எண்ணி தனது சக ஊழியர்களுடன் வெளியே வந்தார்.

முதலில் அந்த ஏரியாவில் பிரபலமாக இருப்பவர்கள் யார், யார், அங்குள்ள மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள். எந்த வழியில் சென்று இவர்களை திசை திருப்புவது என்று சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

பக்கத்தில் உள்ள காவல் நிலையம் சென்று வேண்டிய விவரங்கள் பற்றிக் கூறியவுடன் அவர்கள் நீங்கள் அந்த ஏரியாவில் ரவி, ஜெய், பாண்டு, நட்டு என்ற நான்கு பேர்களைத் தொடர்பு கொண்டால் காரியம் சீக்கிரம் பிரச்சனையில்லாமல் நடக்குமெனக் கூறினார்கள்.

நாங்கள் நாளைக் காலை அவர்களை இங்கே வரச் சொல்கிறோம், நீங்கள் பேசிக் கொள்ளலாம் என்றனர்.

மறு நாள் காலை 10 மணிக்கு மோகன் வந்த போது காவல் நிலையத்தில் அந்த நான்கு பேரும் காத்திருந்ததைக் கண்ட மோகன் அவர்களிடம் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி விட்டு அவர்களிடம் இந்த கொரோனா பற்றி விரிவாகப் பேசினார்.

உங்கள் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு தற்போது நமது கையில் தரப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இந்த பணியில் வெல்ல முடியும் என்றார்.

உங்கள் ஏரியாவை நான்கு பாகங்களாக பிரித்து கண்காணிக்க வேண்டும். முதலில் உங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

கடைகள், தண்ணீர் பிடிக்கும் இடங்கள், ரேஷன் கடைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் சமுதாய இடைவெளிகளைக் கடை பிடிக்க வேண்டும்.

வெளியே செல்வதென்றால் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். கூடிய மட்டும் விழாக்களைத் தவிர்த்தால் நல்லது. நீங்கள் நாலு பேரும் உங்களுக்கு உதவ உங்கள் ஏரியாவில் உள்ள மக்களை உங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

நாளைக்குக் காலையில் உங்களை நாங்கள் உங்கள் ஏரியாவில் சந்திக்கிறோம் என்றார் மோகன்.

மறுநாள் காலையில் 10 மணியளவில் மோகன் தனது சகாக்களுடன் அந்த ஏரியாவிற்கு வந்தடைந்தார். அந்த நான்கு பேரை அழைத்து மோகன் தான் கொண்டு வந்துள்ள 1500 முகக் கவசத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

வீட்டிற்கு ஒரு நபரே வெளியே வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றார். அந்த ஏரியாவிலிருந்து வெளியே யாரும் செல்லாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தினர் அந்த ஏரியா மக்கள்.

21 நாட்கள் கடைபிடிக்கும் ஊரடங்குக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார் மோகன்.

கடைகள், தண்ணீர் பிடிக்கும் இடங்கள், ரேஷன் கடைகளின் முன்னால் மூன்று மீட்டர் இடைவெளி அளவில் வட்டங்கள் வரையப்பட்டது. அந்த ஏரியாவில் வசித்து வந்த யாரும் துணையில்லாமல் இருக்கும் அந்த நபர்களை அந்த இடத்திலிருந்து கிளப்பி பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார் மோகன். அவர்களுக்கு உண்ண உணவு மற்றும் தேவையான எல்லா பொருட்களையும் ஏற்பாடு செய்தார். அந்த நால்வரிடம் தனது சகாக்கள் 24 மணி நேரமும் உங்கள் ஏரியாவில் கண்காணிப்புக்கு இருப்பார்கள் என்று கூறி விடைபெற்றார் மோகன்.

மாலை சரியாக 5 மணியளவில் மோகன் அந்த ஏரியாவிற்கு வந்த பார்த்த போது மக்கள் நடமாட்டம் சாலையில் குறைந்து காணப்பட்டது. ஆனால் சில கடைகள் திறந்திருந்ததைக் கண்டு அந்த கடைக்காரரிடம் நாளை முதல் மதியம் 1 மணியளவில் கடையை மூடி விட வேண்டும் என்று கூறினார்.

அங்கு கண்காணிப்புக்கு நியமிக்கப் பட்டவர்களிடம் உரையாடினார்.

அவர்கள் தாங்கள் முழு ஒத்துழைப்புத் தருவதாக உத்திரவாதம் அளித்தனர்.

ஒவ்வொரு நாளும் மோகன் அந்த ஏரியாவை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தார்.

கிட்டத் தட்ட 15 நாட்கள் சென்ற நிலையில் அங்கு வசித்து வந்த ஒருவரின் உறவினர் இறந்து விட்டதாக அறிந்து கட்டாயம் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அவரது விவரத்தை மோகனுக்கு தெரியப் படுத்தினர். உடனே மோகன் அவரை அழைத்து கட்டாயம் செல்ல வேண்டுமென்றால் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் அங்குள்ள மக்களிடம் கலந்து கொண்டு நீங்கள் தொற்று நோயை கொண்டு வராமல் பாதுகாக்காக இருக்க வேண்டுமென்றும் என்றார்.

அவர் உடனே அலைபேசியில் அங்குவுள்ளவர்களைத் தொடர்பு கொண்டு மோகனிடம் தந்தார்.

மோகன் அவர்களிடம் அங்கு யாருக்காவது கொரோனா தொற்று இருக்கிறதா என்று வினவினார்.

அவர்கள் இங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை, அவர் தற்போது கிளம்பி வந்தால் மாலைக்குள் அவர் அங்கு திரும்பி வந்து விடட்டும். இங்கு தங்க வேண்டாம் என்று கூறினார்.

மோகன் அவர் அங்கு சென்று வர ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்த செய்கை அந்த ஏரியா மக்களிடம் மோகனுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தித் தந்தது.

இவ்வாறாக அந்த ஏரியாவில் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தனது முழு உழைப்பையும் தந்து மோகன் வெற்றி கண்டார்.

21 நாட்கள் ஊரடங்கு முடியும் நாளில் மோகன் எல்லோரிடமும் இன்னும் சில நாட்கள் இந்த முறையையே பின்பற்றுங்கள். உங்கள் ஒத்துழைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றியினை எங்கள் சார்பில் கூறுகிறோம் என்றார்.

அப்போது அங்கு வந்த மைதிலி என்ற பெண் சார் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று வினவினாள்.

சுற்றியிருந்த எல்லோரும் என்ன கேள்வி அவரைக் கேட்கிறாய் என்று அவளை ஏசினர்.

மோகன் நிதானமாக ஆகி விட்டது தங்கச்சி. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்றார்.

அப்போது மைதிலி ஒரு சிறு பிரச்சனை. நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டுமென்றாள்.

அப்போது அங்கு வந்த சத்தியன் சார் இவளிடமெல்லாம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கூறினான்.

மோகன் மைதிலியிடம் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

சார் இவர் என் முறைமாமன். திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார், ஒரு முடிவைக் கேட்டுச் சொல்லுங்கள் என்றாள்.

மோகன் சத்தியனை நோக்கினார்.

உடனே சத்தியன், ‘‘சார் இவ்வளவு தூரம் வந்ததற்கு அப்புறம் இந்த விஷயத்தை சீக்கிரம் முடிப்பதே நல்லது, இந்த நிலைமை சரியானதும் உடனே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்’’ என்றான்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக மோகனைப் பாராட்டினார்கள்.

உங்க கல்யாணத்திற்கு பட்டுப்புடவை, பட்டு வேட்டி என் சீதனம் என்று மோகன் கூறினார்.

மைதிலி அந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாணத்தால் தலை குனிந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *