சென்னை, செப். 9–
மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்ட்டுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.