புதுடெல்லி, பிப். 26–
இன்று மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:– மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் மகாதேவரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டு மென்றும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும். ஹரஹர மகாதேவ் என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும். ஹரஹர மகாதேவ்’’ என கூறியுள்ளார்.
மகா சிவராத்திரியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மகாசிவராத்திரி என்பது ஒரு புனிதமான சனாதன விழிப்புணர்வுத் திருவிழா. மந்த நிலையிலிருந்து விழித்தெழுந்து, குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவைத் தேடவும், சிறந்த மாற்றத்தைத் தழுவவும் விடுக்கப்படும் அழைப்பு இத்திருவிழா. இது நாட்டின் பரந்த நன்மைக்காக சுய விழிப்புணர்வு மற்றும் புத்துயிர் பெறுவதைக் குறிக்கிறது. சிவபெருமான் மற்றும் ஆதி சக்தியின் தெய்வீக சங்கமம் நமக்குத் தேவையான மாற்றத்திற்கான ஆற்றல்வாய்ந்த சக்தியை வழங்கட்டும். மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047ஐ உருவாக்க நமது மக்களிடையே ஆன்மிக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். ஹர ஹர மகாதேவா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.