லக்னோ, ஜன. 31–
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தை அமாவாசையையொட்டி கடந்த 29ம் தேதி அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட 7 கோடியே 64 லட்சம் பேர் திரண்டனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளு மற்றும் நெரிசல் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் பிரயாக்ராஜில் தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங், டிஜிபி பிரசாந்த் குமார் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.