செய்திகள்

மகா கும்பமேளா கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை: கட்டணம் ரூ.35,000

Makkal Kural Official

பிரயாக்ராஜ், பிப். 11–

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதுவரை 43 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.

தற்போது அந்த இரு விஷேச நாள்களையும் தாண்டி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கிப் படையெடுத்துள்ளனர்.இதனால் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்தியப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் சுமார் 50 கி.மீ. தொலைவைக் கடக்கவே 12 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாதுகாப்பு காரணமாக பிரயாக்ராஜ் ரெயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் சாலை மார்க்கமாக மட்டுமே பக்தர்கள் பிரயாக்ராஜ் பகுதிக்கு வந்து திரிவேணி சங்கமத்தை அடைகின்றனர்.

இந்நிலையில் பிரயாக்ராஜில் உள்ள பக்தர்களை திரிவேணி சங்கமத்தில் சேர்க்க ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. அரியாணாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிளை ஓலா நிறுவனத்துடனான கூட்டு நடவடிக்கையால் உத்தரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி வாரியம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து திரிவேணி சங்கமத்தின் படகு இல்லம் வரை ஹெலிகாப்டர் சேவை செயல்படுகிறது. படகு இல்லத்தில் இருந்து புனித நீராடிய பிறகு பக்தர்கள் மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் 4 – 5 மணி நேரத்தில் பக்தர்கள் புனித நீராடி திரும்ப முடிவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்த ஒரு நபருக்கு ரூ. 35,000 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தில் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமில்லாமல் படகு சவாரி, உடை மாற்றும், தங்கும் இடம் உள்ளிட்டவை செய்து தரப்படுகின்றன. இதற்காக பிளை ஓலா இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

நாளை பௌர்ணமி:

முக்கிய உத்தரவு

நாளை மாகி பூர்ணிமா (பெளர்ணமி) என்பதால், அதிக அளவிலான பக்தர்கள் புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்து போலீசார் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். கும்பமேளா நடைபெற்று வரும் பகுதியில் வாகனங்கள் அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இன்று முதல், கும்பமேளா நடக்கும் பகுதியைச் சுற்றிலும் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வாகனங்களை அதற்கென இருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துசெல்லும் வகையில் திட்டமிடப்படுள்ளது.இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் மற்றும் வாகனங்களுக்குள்ளேயே மக்கள் சிக்கிக் கொள்வது என்ற நிலை தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *