செய்திகள்

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

ரூ.100 கோடி மாமுல் விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை, ஏப்.6-

மாதம் ரூ.100 கோடி மாமுல் உள்ளிட்ட முறைகேடு புகார்களை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு கார் மீட்கப்பட்ட வழக்கு மற்றும் அந்த வெடிகுண்டு காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகியவை அம்மாநில கூட்டணி அரசில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்குகளில் மும்பை குற்றப்பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளால் கடந்த மாதம் 13-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், மாநில ஊர்க்காவல் டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். போலீஸ் அதிகாரிகள் செய்த மன்னிக்க முடியாத குற்றத்துக்காக பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.

இதையடுத்து பரம்பீர் சிங், அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மதுபான விடுதி, ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை அமைச்சர் கட்டாயப்படுத்தினார் என்று முதல்வருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

பொது நல மனு

இந்த விவகாரம் கூட்டணி அரசில் புயலை கிளப்பிய நிலையில், அவர் மும்பை ஐகோர்ட்டிலும் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாமூல் கேட்ட விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

மேலும் அனில் தேஷ்முக் போலீஸ் பணிநியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் முறைகேடு செய்ததாகவும், தாத்ரா நஹர் ஹவேலி தொகுதி சுயேச்சை எம்.பி. மோகன் தேல்கார் வழக்கில் பாரதீய ஜனதா தலைவர்களை சிக்க வைக்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

போலீஸ் அதிகாரி பரம்பீர் சிங்கின் மனுவை விசாரித்த ஐகோர்ட், நேற்று மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான முறைகேடு புகார்களை 15 நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *