மும்பை, நவ. 26–
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க., சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இதில் பா.ஜ.க. 132 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
கோப்ரி–பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியிலும், அஜித் பவார், பாராமதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதால் அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த முதல்வர் பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போதைய முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இருந்தார். புதிய அரசு அமையும் வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார்.