மும்பை, ஜூலை 1–
மகாராஷ்டிரா மாநிலம் புஷி அணையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள புஷி அணைக்கு புனேவின் ஹதப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கானின் குடும்பத்தினர் 18 பேர் வந்துள்ளனர். அணையின் பின்புறம் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதில் 10 பேர் சிக்கி தவித்துள்ளனர். அதிலிருந்து 5 பேர் தப்பிய நிலையில் 5 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள் ஐவரும் மாயமாகினர். இதனைக் கண்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உள்ளூர் பகுதியை சேர்ந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் மூவரின் உடல் மீட்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
40 வயது பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. லோனாவாலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சுமார் 163 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழைக் காலம் என்பதால் நீர்வீழ்ச்சிக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.