இந்தியா 76! செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் 167 வேட்பாளர்

Makkal Kural Official

மும்பை, நவ. 02

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் ஒரே தொகுதியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், 9 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு 20 ந்தேதி நடக்க இருக்கும் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், காங்கிரஸும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஷ் அகாடி மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான மகா யுதி என இரண்டு கூட்டணிகளிலும் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடைசி வரை நீடித்தது.

குறிப்பாக மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மும்பையில் 30 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் இப்போது வெறும் 11 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி 2 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

ஒரே தொகுதியில் 167 பேர்

இது குறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், ”காங்கிரஸ் 15 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் 11 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு, மகாவிகாஷ் அகாடி அதிக தொகுதியில் வெற்றி பெறுவதற்காக எங்களது தொகுதியை குறைத்துக் கொண்டோம்” என்றார்.

நான்டெட் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியில் 167 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மகள் போட்டியிடுகிறார். 4 ந்தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் சிலர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெறக்கூடும் என்று நான்டெட் மாவட்ட ஆட்சித்தலைவர் அபிஜித் ராவுத் தெரிவித்தார்.

அப்படி இருந்தாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 9 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்றும், அதனை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அபிஜித் ராவுத் தெரிவித்தார். இதற்கு முன்பு தெலங்கானாவில் ஒரே தொகுதியில் 185 பேர் போட்டியிட்டனர். அதனை ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று அபிஜித் தெரிவித்தார். பீட் தொகுதியிலும் 100க்கும் அதிகமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *