செய்திகள்

மகாராஷ்டிரா சட்டசபையில் 4–ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை, ஜூலை 1–

மகாராஷ்டிரா சட்டசபையில் வரும் 4–ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். இதேபோல தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் நாளை முதல் தொடங்கவிருந்த மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர் பதிவிக்கான வேட்புமனு தாக்கல் நடக்கும் என்றும் நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இக்கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட 39 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இதனால் இந்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அவர்களை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவசேனா தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்து இருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.