பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே இரங்கல்
மும்பை, ஜூலை 1–
மகாராஷ்டிராவில் அதிகாலை 2 மணி அளவில் பேருந்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த பேருந்து புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
26 பேர் பலி
இந்த விபத்தில், பேருந்தில் உள்ள டீசல் டேங்க் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இந்த தீ பேருந்து முழுவதும் பரவிய நிலையில், 3 குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணத்தை 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலா ரூ.7 லட்சம் நிவாரணம்
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விபத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், காயம் பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம்பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரங்கல் செய்தியில், பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.