செய்திகள்

மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்: சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சி

மும்பை, ஜூன் 28–

மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார்.

இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே கடந்த 20-ந்தேதி சிவசேனை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரட்டினார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

மொத்தம் உள்ள 55 சிவசேனை எம்.எல்.ஏக்களில் 38 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அவருடன் உள்ளனர். மொத்தம் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ் தாக்கரே ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தனது அரசை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே மேற்கொண்டார்.

சிவசேனை அனுப்பிய கடிதத்தை ஏற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கும் கடந்த சனிக்கிழமை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வால் தகுதி நீக்க நோட்டீசை அனுப்பினார். இதற்கு நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இடைக்கால தடை

உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் வாபஸ் பெற்று விட்டதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருந்தனர். தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்டிவாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான மகாராஷ்டிரா மாநில சட்டசபை செயலகத்தின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஜூலை 12-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஜூலை 12-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். இது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் சுற்று வெற்றியாக கருதப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கைக்கும், எனது குரு ஆனந்த் திதேகவின் லட்சியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்” என்றார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாட்களில் மும்பை வருகிறார். அவர் கவர்னர் கோஷியாரியை சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

வருகிற 3-ந்தேதிக்குள் புதிய அரசை பாரதீய ஜனதா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.