மக்கள் குரல் பார்வையில்

மகாத்மா திரும்பினார், சத்யாகிரக வழியில் சுதந்திரம் பெற்றும் தந்தார்

Makkal Kural Official

இன்றைய தினம் (ஜனவரி 9) இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை நாள். வழக்கறிஞர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகச் சென்றவர், ஓர் அறப்போராளியாக, மகாத்மாவாக, தாயகம் திரும்பிய நாள் இது.

1915-ஆம் ஆண்டு இதே நாளில், தென்னாபிரிக்காவில் 21 ஆண்டுகளாக வாழ்ந்து போராடிய மகாத்மா காந்தி, மும்பை அப்போலோ பண்டர் துறைமுகம், இன்றைய இந்திய கேட் வே, வழியாக தாய்நாட்டுக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இதுவே, காந்தியடிகளின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய தருணமாகும்.

இந்தத் தினத்தின் நினைவாகவே, ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர் தினம்’ (Pravasi Bharatiya Divas) ஆகக் கொண்டாடப்படுகிறது. காந்தியின் வருகை, இந்திய அரசியலில் சாதாரண மக்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஒரு மாபெரும் மாற்றத்தின் தொடக்கமாகும்.

தியாகங்களை நினைவூட்டும் நாள்:

இந்த நாளின் தேசிய முக்கியத்துவத்தை உணர்ந்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், ஜனவரி 9 “பிரவாசி பாரதிய திவஸ்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர் இந்தியர்கள் செய்த தியாகங்களை இந்த நாள் நினைவூட்டுகிறது.

தமிழ்நாட்டுடன் உள்ள ஆழமான தொடர்பும் மறுக்க முடியாது மகாத்மா காந்தியின் அரசியல் சிந்தனைகளுக்கும், ‘சத்யாகிரகம்’ என்ற அறவழிப் போராட்டக் கோட்பாட்டிற்கும் அடித்தளமாக இருந்தது, தென்னாபிரிக்காவில் வாழ்ந்த தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்களின் துயரமும் தியாகமும். தில்லையாடி வள்ளியம்மை போன்ற இளம்பெண்கள் உட்பட, பல தமிழர்கள் அனுபவித்த அவமதிப்புகள் காந்தியடிகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

“என் சத்யாகிரகம் தென்னாபிரிக்காவில் பிறந்தது; அதற்குக் காரணம் தமிழர்களின் தியாகம்” என்று காந்தி பலமுறை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்த அனுபவங்களே, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு புதிய அறவழிப் பாதையை உருவாக்கின.

அதனால், மகாத்மா காந்தியின் தாய்நாட்டிற்கான இந்த திரும்பிய நன் நாள் , ஒரு மனிதரின் பயணம் மட்டுமல்ல; இந்திய விடுதலைக்கு வழி வகுத்த ஒரு வரலாற்றுத் திருப்பம் என்பதே மக்கள் குரலின் பார்வை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *