கி. வீரமணி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று வாழ்த்து
சென்னை, மார்ச் 18–
“மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்–வேற்றுமையில் ஒற்றுமை” புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மை ஆணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்– வேற்றுமையில் ஒற்றுமை” நூல் வெளியீட்டு விழா இன்று காலை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கிய இந்த விழாவில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூலை வெளியிட, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஆ.கோபாண்ணா, உ.பலராமன் ஆகியோர் பெற்றுக்காெண்டனர்.
நிகழ்ச்சியில், கி.வீரமணி பேசியதாவது:–
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக உடனடியாக புற்பட்டதால், அவருடைய வாழ்த்துகளை நேரில் தெரிவித்து சென்றுள்ளார். இன்று பொய்களை மட்டுமே கொண்டு பாஜக என்ற ஒரு கட்சி செயல்பட்டு வருகிறது. மோடி அதனைத்தான் நாள்தோறும் செய்து வருகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இயல்பு மட்டுமல்ல. அது அறிவியல் உண்மையும் கூட. “Unlike poles attracts” என்பதுதான் அறிவியல். பல மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமைதான் ஆழமான பொருள் பொதிந்த கருத்து.
காந்தியாருக்கும், தந்தை பெரியாருக்கும் கருத்து வேற்றுமை இருந்ததை மறைக்க வேண்டியதில்லை. ஆனால், இருவருக்கும் மனத நேயத்தில் ஒற்றுமை இருந்தது.
பதவியை விரும்பாதவர்கள்
அண்ணல் காந்திக்கு தந்தை பெரியார் என்ன கருத்தை வலியுறுத்தினாரோ, அதனை இன்று ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசு நிகழ்ச்சிகளில் மதத்தை கலக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார். அதன் பிறகுதான் அவர் சில வாரங்களில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது. இன்று இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கைகளை ராகுல் காந்தி தலைமையில் முன்னெடுக்கிறது. எனவே இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, ஒரு நாட்டில் விடுதலையில் ஒரு தலைவர் ஈடுபடுகிறார் என்றால், அந்த நாடு விடுதலை பெற்ற பிறகு, அந்த தலைவர்தான் ஆட்சி அமைப்பார். இதுதான் உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மகாத்மா காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை, நேருவிடம் கொடுத்தார். அவருக்கு பதவி ஆசை இல்லை. அதேபோல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, பெண் விடுதலை, சுயமரியாதை என தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு பாடுபட்ட தந்தை பெரியார் எந்த பதவியையும் விரும்பியதில்லை. இது இரண்டு தலைவர்களுக்கும் உள்ள ஒற்றுமை என்று கூறினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா பேசும்போது, தந்தை பெரியார் ஆத்தூர் அருகே பேசிக்கொண்டு இருந்த போது, காமராசர் முதலமைச்சரான செய்தி ஒரு துண்டு காகிதத்தில் அவரிடம் தரப்பட்டது. உடனே பெரியார், தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக ஒரு பச்சைத் தமிழர் முதல்வராகி உள்ளார் என்று பேசினார். காமராசர் முதலமைச்சராக இருந்த 9 1/2 ஆண்டு காலமும் அவரை பெரியார் தாங்கிப்பிடித்தார். காங்கிரசார் கூட அத்தனை தாங்கிப்பிடித்ததில்லை என்றார்.
நிகழ்ச்சியில் நூலாசிரியர் தக்கோலம் வே.ஜம்பு ஏற்புரை வழங்கினார். ஜி.சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.